ஒரு பக்கம் யெஸ் பேங்க் பிரச்சனை எப்படி இன்று தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறதோ, அதே போல கடந்த 2019-ல் பூகம்பத்தைக் கிளப்பிய நிறுவனம் தான் திவான் ஹவுசிங்.
இதை ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) என்று சொல்வார்கள். அதாவது வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி, அதிக வட்டிக்கு வெளியே கடன் கொடுப்பார்கள்.
2019-ம் ஆண்டு, இந்தியாவில் திவாலான முதல் வங்கி அல்லாத நிதி நிறுவனம் தான் இந்த திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட். இப்போது இந்த நிறுவனத்தின் டெபாசிட்டில் தான் ஒரு பிரச்சனை வந்து இருக்கிறது.

என்ன பிரச்சனை
திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் முழுமையாக திவால் ஆகிவிட்டது. இப்போது இந்த நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியவர்கள், தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாமல், தங்கள் டெபாசிட் தொகையை, கடனுக்கு பதிலாக கழித்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தியை லைவ் மிண்ட் நிறுவனம் தன் வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.

ஆலோசனை
திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கும் சுப்ரமணிய குமாரோ சட்ட ஆலோசகர்களான AZB and Partners-களிடம் என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டு இருக்கிறாராம். ஃபிக்ஸட் டெபாசிட்-க்கு எதிராக கடன் கொடுத்து இருக்கும் அளவு குறைவு தான், பெரிய கடன் தொகை ஒன்றும் இல்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சட்ட சிக்கல்
ஒரு நிதி நிறுவனம் திவால் ஆகிவிட்டது. அதன் பிறகு corporate insolvency resolution process நடந்து கொண்டிருக்கும் போது, டெபாசிட்டர்களால் பணத்தை வெளியே எடுக்க முடியாது. ஆனால் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை கடனுக்கு சரிகட்டச் சொல்வதைச் செய்ய முடியுமா என்கிற சட்ட சிக்கல் எழுந்து இருக்கிறது.

யார் பணம்
இதுவரை திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை நிர்வகிப்பவர்கள், மொத்தம் 86,469 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என பற்றுக் (Creditors) கணக்கைச் சொல்லி இருக்கிறார்கள். அதில் 5,270 கோடி ரூபாய் சுமார் 69,000 ஃபிக்ஸட் டெபாசிட்டர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமாம். மீதம் இருக்கும் 81,140 கோடி ரூபாய் தான் வங்கிகள் மற்றும் கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருப்பவர்களின் பணமாம்.

யாருக்குக் கடன்
திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் மொத்தம் 1.19 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்களாம். அதில் 63,690 கோடி ரூபாய் தான் சில்லறைக் கடன். பாக்கி எல்லாமே பெரிய இடத்துக்கு, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு கொடுத்து இருக்கும் கடன் தானாம். இப்போது வசூலிக்க வேண்டிய கடனுக்கு பதிலாக, ஃபிக்ஸட் டெபாசிட் பணத்தை கழித்துக் கொள்வார்களா..? காத்திருந்து பார்ப்போம்.