இந்தியப் பொருளாதாரம் கொரோனா பிடியில் இருந்து தப்பி வளர்ச்சி பாதிக்குத் திரும்பிய நிலையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை போர் மூலம் அதிகளவிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
ஒருபக்கம் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த சரியான காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்கும் வகையில் பல முக்கியமான திட்டத்தையும், சீர்திருத்த நடவடிக்கைகளையும் கையில் எடுத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.
ஜிஎஸ்டி-யில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..? 3%, 8% வரி நடைமுறைக்கு வருமா..?!

அஜய் சேத்
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறைக்கு (DEA) புதிய செயலாளரை இந்திய அரசு தேடும் பணிகளைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இப்பதவியில் இருக்கும் அஜய் சேத்-க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய நிதியமைச்சகம் புதிய அதிகாரியைத் தேட முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 30 வரை
1987-ம் ஆண்டுப் பேட்ச் கர்நாடக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய் சேத், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சிகிச்சைக்காக மத்திய அரசு அவருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் விடுப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மருத்துவமனை
தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அஜய் சே தற்போது டெல்லியில் இருக்கும் முக்கியமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். அஜய் சேத் இல்லாதது நிதியமைச்சகத்திற்குப் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

தருண் பஜாஜ்
இந்த நிலையில் பொருளாதார விவகாரத் துறைக்கு (DEA) புதிய செயலாளர் பணிகளைத் தற்காலிகமாக, இந்த மாத இறுதி வரை வருவாய்த்துறை செயலாளரான தருண் பஜாஜ்-க்கு தற்காலிக பொறுப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதே வேளையில் இப்பதவிக்குப் புதிய அதிகாரியை நியமிக்கும் பணிகளையும் துவங்கியுள்ளது.

துகின் காந்த பாண்டே
மேலும் ஏற்கனவே இப்பதவியில் இருந்த தருண் பஜாஜ் மீண்டும் பொருளாதார விவகார துறை செயலாளர்-ஆக நியமிக்கப்பட்டால், மத்திய அரசின் DIPAM பிரிவின் செயலாளராக இருக்கும் துகின் காந்த பாண்டே-வுக்கு வருவாய் துறை செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.