எலக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல், டீசல் கார்களைக் காட்டிலும் சிறப்பானவை என்பதைத் தாண்டி சுற்றுசூழல்-க்கும் பல நன்மைகளைச் சேர்கிறது.
எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி மொத்தமாக நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டு எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதில் முக்கியமாக மத்திய மாநில அரசுகள் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரிக்கப் பல வரி சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து உள்ளது.
அப்படி எவ்வளவு வரிச் சலுகை மற்றும் தள்ளுபடி கிடைக்கிறது என்பதை முழுமையாகப் பார்ப்போம் வாங்க...
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க குறைந்த வட்டியில் சிறப்புக் கடன்.. ஆர்பிஐ ஸ்பெஷல் திட்டம்..!

வருமான வரிப் பிரிவு 80EEB
பொதுவாகத் தற்போது மக்கள் பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கார்களை வங்கி கடன் வாயிலாகத் தான் வாங்குகின்றனர். இந்த வரையில் எலக்ட்ரிக் கார்களை வங்கி கடன் மூலம் வாங்கும் போது வருமான வரிப் பிரிவு 80EEB கீழ் சுமார் 1,50,000 ரூபாய் அளவிலான வருமான வரித் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

1,50,000 ரூபாய் வரித் தளர்வுகள்
இந்த 1,50,000 ரூபாய் அளவிலான வரித் தளர்வுகள் 4 சக்கரம் மற்றும் 2 சக்கர வாகனங்களுக்கும் பொருந்தும். மேலும் இந்த வரிச் சலுகை தனிநபர்களுக்கு மட்டுமே மற்ற பிரிவினருக்கு இந்த வரிச் சலுகை கிடையாது.

ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே
மேலும் இந்த வரிச் சலுகை ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே அளிக்கப்படுகிறது. மத்திய வருமான வரித்துறையின் அறிவிப்பின் படி 2019 ஏப்ரல் 1 முதல் 2023 மார்ச் 31 வரையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கடனுக்குச் செலுத்தப்பட்ட தொகைக்கு 80EEB கீழ் வருமான வரிச் சலுகை உண்டு, இந்த வரிச் சலுகை 2023க்குப் பின் நீட்டிக்கப்படுமென என்பது மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

FAME-II திட்டம்
மத்திய அரசு கடந்த ஆண்டு எலக்டிரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைத்தது, இதேபோல் இரு சக்கர வாகனங்களை 40 சதவீதம் வரையிலான மானிய விலையில் பெறுவதற்காகத் திருத்தத்தை FAME-II கீழ் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசின் சலுகை
மத்திய அரசு அல்லாமல் மாநில அரசும் சில குறிப்பிட்ட தொகையை மானியமாக அளிக்கிறது, இது FAME-IIக்கு தாண்டி அளிக்கப்படும் சலுகை என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா 2.5 லட்சம் ரூபாய், டெல்லி, குஜராத், அசாம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை 1.5 லட்சம் ரூபாய், ஒடிசா 1 லட்சம், மேகாலயா 60000 ரூபாய் வரையில் கார்களுக்கு அளிக்கிறது.

இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனங்களுக்கு டெல்லி, மகாராஷ்டிரா, மேகாலயா, குஜராத், அசாம், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் 5,000 முதல் 30,000 ரூபாய் வரையில் மானியம் கொடுக்கிறது.

தமிழ்நாடு
ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களைக் கொடுக்காவிட்டாலும் சாலை வரியை 100% ரத்துச் செய்து மிகப்பெரிய தளர்வுகளை அளித்து வருகிறது.