இந்தியாவின் பிராட்பேன்ட் சேவையைத் தலைகீழாகப் புரட்டிப்போட வரும் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனால் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளது.
எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவிற்கு வந்த நிலையில், அடுத்ததாகப் பிராட்பேன்ட் சேவையில் புரட்சி செய்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க சேவை இந்தியாவில் கூடிய விரைவில் வர உள்ளது.

எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க்
இந்தியாவில் டேட்டா மற்றும் இண்டர்நெட் புரட்சி வெடித்துள்ள நிலையில், இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் என்கிற செயற்கைக்கோள் வாயிலான இண்டர்நெட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

ஸ்டார்லிங்க் இணையத் தளம்
இதைத்தொடர்ந்து தற்போது ஸ்டார்லிங்க் இணையத் தளத்தில் இந்தியாவில் இச்சேவையைப் பெறுவதற்காக ப்ரீ புக்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய இந்திய நகரங்கள்
முதற்கட்டமாக ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

99 டாலர் வைப்புத் தொகை
இந்திய முகவரிக்கு இதுநாள் வரையில் ப்ரீ புக்கிங் சேவையை அளிக்காத ஸ்டார்லிங்க் தற்போது இந்தியச் சந்தைக்கான ப்ரீ புக்கிங் சேவையைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் 99 டாலர் டெப்பாசிட் தொகை கொண்டு ஸ்டார்லிங்க்-ஐ பெறலாம்.

முன்னுரிமை வழங்கப்படும்
இந்த ப்ரீ புக்கிங் சேவை மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். டெப்பாசிட் தொகை முழுமையாகத் திரும்பப் பெறும் வசதி உள்ளதாக விருப்பம் மாறும்போது எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

300 MBPS வேக இண்டர்நெட்
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் சேவையில் தற்போது 50 முதல் 150 MBPS வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் சேவை கிடைத்து வரும் நிலையில், 2021 முடிவிற்குள் இதன் அளவீட்டை 300 MBPS வேகத்திற்கு உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக அடுத்தடுத்த செயற்கைகோள்கைகளை விண்ணில் செலுத்தி வருகிறது ஸ்பேஸ்எக்ஸ்.