தமிழ்நாட்டுக்கு எப்படிச் சென்னை வந்தாரை வாழ வைக்கிறதோ, உலக நாடுகளுக்கு அமெரிக்கா. படிப்பையும் திறமையும் மட்டுமே நம்பி ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய எலான் மஸ்க்-க்கு அமெரிக்கா பல வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து இன்று ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க வரையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து புதிய சகாப்தத்தைப் படைக்கத் துவங்கியுள்ளார்.
இந்த வரிசையில் தற்போது புதிய சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறார் எலான் மஸ்க்.

டெஸ்லா நிறுவனம்
எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா நிறுவனம் 2021ஆம் ஆண்டில் வர்த்தகம், வருமானம், சந்தை ஆதிக்கம், பங்கு மதிப்பு என அனைத்திலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக டெஸ்லா பங்குகளை அதிகளவில் வைத்திருப்பதன் மூலம், எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகரிக்கும் காரணத்தால் அதிகப்படியான வருமான வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

11 பில்லியன் டாலர் வரி
இதன் படி எலான் மஸ்க் 2021ஆம் ஆண்டுக்கு மட்டும் சுமார் 11 பில்லியன் டாலர் அளவிலான வருமான வரியைச் செலுத்துவதாகத் தனது டிவிட்டரில் கூறியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை யாரும் இவ்வளவு பெரிய தொகையை ஒரே ஒரு வருடத்திற்கு வருமான வரியாகச் செலுத்தியது இல்லை.

பணக்காரர்களின் ஆதிக்கம்
இந்தியாவைப் போலவே அமெரிக்காவில் பணக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் நீண்ட காலமாகவே பணக்காரர்கள் மீது அதிகப்படியான வருமான வரியை செலுத்த வேண்டும் என்ற கருத்தை அமெரிக்காவின் ஜனநாயகம் கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

எலிசபெத் வாரன்
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான எலிசபெத் வாரன் தனது டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் அதிக வரி செலுத்த வேண்டும் எனப் பதிவிட்டார். இதற்குப் பதில் அளித்துள்ள எலான் மஸ்க் அமெரிக்க வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக வருமான வரி செலுத்த உள்ளேன் எனத் தெரிவித்தார்.

எலான் மஸ்க் டிவீட்
இதைத் தொடர்ந்து அடுத்த டிவீட்டில் நான் எவ்வளவு வருமான வரி செலுத்தப் போகிறேன் என யோசிப்பவர்களுக்கு என்னுடைய பதில் என்ற தொனியில் இந்த ஆண்டு நான் 11 பில்லியன் டாலர் அளவிலான வருமான வரி செலுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் சொத்து மதிப்பு
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 244.2 பில்லியன் டாலராகும், 2021ஆம் ஆண்டு மட்டும் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு சுமார் 151 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இந்த வருடம் மட்டும் எலான் மஸ்க் சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.