டெல்லி: கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத அளவு குறைந்திருந்தாலும், யாரும் எதிர்பாராத விதமாக பெட்ரோல் டீசல் விலையானது, அனுதினமும் இன்று வரையில் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது.
இதற்கு கச்சா எண்ணெய் விலை மாற்றம் ஒரு காரணம் என்றால், விலை குறையாததற்கு அரசின் கலால் வரியும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் வரலாறு காணாத அளவு கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும் கூட, அதன் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.
ஏனெனில் அந்த பலனை மத்திய மாநில அரசுகள் வரியாக திருப்பி எடுத்துக் கொண்டன. இதனால் எரிபொருள் விலையானது எதிர்பார்த்த அளவு குறையவில்லை.

வரி வசூல் அதிகரிப்பு
இதற்கிடையில் அரசின் இந்த வரி அதிகரிப்பின் காரணமாக, அரசின் வசூலானது நடப்பு ஆண்டில் வரலாறு காணாத அளவு 48% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சராசரியான அளவு எரிபொருள் விற்பனை இருந்தபோதிலும் கூட, இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரி வசூல் எவ்வளவு?
CGAவின் அறிக்கையின் படி, கடந்த ஏப்ரல் - நவம்பர் மாத காலகட்டத்தில் வரி வசூலானது 1,32,899 கோடி ரூபாயில் இருந்து, 1,96,342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதிலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், எட்டு மாத காலகட்டத்தில் டீசல் பயன்பாடானது வழக்கத்தினை விட, 10 மில்லியன் குறைவாகும்.

எவ்வளவு பெட்ரோல், டீசல் நுகர்வு?
எண்ணெய் அமைச்சகத்தின் தரவுகளின் படி, முந்தைய ஆண்டில் மொத்தம் ஏப்ரல் - நவம்பர் காலப்பகுதியில், டீசல் நுகர்வானது 55.4 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 44.9 மில்லியன் டன்னாக இருந்தது. இதே ஏப்ரல் - நவம்பர் 2019 காலகட்டத்தில் பெட்ரோல் நுகர்வானது 20.4 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2020ல் அதே காலகட்டத்தில் 17.4 மில்லியன் டன்னாக இருந்தது.

எவ்வளவு வரி விகிதம்?
நடப்பு ஆண்டில் பெட்ரோல் மீதான கலால் வரி விகிதம் லிட்டருக்கு 13 ரூபாயும், இதே டீசலுக்கு 16 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதிலும் இந்த விகிதமானது கச்சா எண்ணெய் விலையானது, இரு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த நிலையில் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி மொத்தம் லிட்டருக்கு 32.98 ரூபாயாகவும், இதே டீசலுக்கு, லிட்டருக்கு 31.83 ரூபாயும் அதிகரித்துள்ளது.

எவ்வளவு வரி வசூல்
கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் மொத்த கலால் வரி வசூலானது 2,39,599 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளதாக CGA தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2020 - 21ம் நிதியாண்டில் மத்திய கலால் வரி பெட்ரோலுக்கு 39 சதவீதமும், டீசலுக்கு 42.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதோடு மாநில அரசுகளின் வரிகளையும் கருத்தில் கொண்டால், மொத்த சில்லறை விற்பனை விலையில், சுமார் மூன்றில் இரண்டு பங்காகும்.

எவ்வளவு முறை?
கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன் முறையாக பதவியேற்ற பிறகு பெட்ரோல் மீதான கலால் வரி 9.48 ரூபாயாகவும், இதே டீசல் மீதான வரி விகிதம் லிட்டருக்கு 3.56 ரூபாயாகவும் இருந்தது. கடந்த நவம்பர் 2014 மற்றும் ஜனவரி 2016 காலகட்டங்களில் ஒன்பது முறை பெட்ரோல், டீசல் மீதான வரி விகிதம் உயர்ந்தது. மொத்தத்தில் 15 மாதங்களில் பெட்ரோல் மீதான வரி விகிதம் லிட்டருக்கு 11.77 ரூபாயாகவும், இதே டீசலுக்கு 13.47 ரூபாயாகவும் அதிகரித்தது.

வசூல் அதிகரிப்பு
இதனால் கடந்த 2014 - 15ல் வெறும் 99,000 கோடி ரூபாயாக இருந்த வரி வசூலானது, 2016 - 17ல் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 2,42,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. கடந்த அக்டோபர் 2017ல் அரசாங்கம் கலால் வரியை 2 ரூபாயாகவும், அதன் பிறகு ஒரு வருடம் கழித்து 1.50 ரூபாயாகவும் குறைத்தது. ஆனால் மீண்டும் ஜூலை 2019ல் தலா 2 ரூபாய் அதிகரித்தது. இதே கடந்த மார்ச் 2020ல் லிட்டருக்கு கலால் வரியை தலா 3 ரூபாய் உயர்த்தியது. இதனையடுத்து இதே ஆண்டு மே மாதத்தில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும், இதே டீசல் மீதான வரியை 13 ரூபாயும் உயர்த்தியது.

அடிப்படை கலால் வரி
கச்சா எண்ணெய் மீதான அடிப்படை கலால் வரி குறிப்பிடத்தக்கதாக இல்லை என்றாலும், சுமார் 11 சதவீதமாக இருக்கலாம் என்றும், இதே இயற்கை எரிவாயு மீதான விகிதம் சுமார் 14 சதவீதமும் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக எரிபொருள் விலையில் வரி விகிதமே இருப்பது குறிப்பிடத்தக்கது.