டெல்லி: கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு மாநிலங்கள் தள்ளுபடி செய்த விவசாய கடன்களின் மொத்த மதிப்பு, ரூ.4.7 லட்சம் கோடி என்று, தகவல் வெளியாகியுள்ளது. இது தொழில்துறை, வரா கடன்களுடன் ஒப்பிட்டால், 82 சதவீதமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம், தொழில்துறையினருக்குதான் அரசு அதிகப்படியான கடன்களை தள்ளுபடி செய்கிறது என்ற ஆதாரமில்லாத வாதம் அடிபட்டுப்போகிறது.
கடந்த மாநில நிதியாண்டில், பல்வேறு மாநிலங்கள் மொத்தமாக ரூ .4.7 லட்சம் கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. விவசாய கடன் நான்-பெர்மார்மிங் அசட்ஸ் (என்.பி.ஏக்கள்) 12.4 சதவீதமாக உயர்ந்தன. ரூ .8,79,000 கோடி மதிப்புக்கு கொடுக்கப்பட்ட கடன்களில் ரூ.1.1 லட்சம் கோடி வராக் கடன் என தெரியவந்துள்ளது.
2016வது நிதியாண்டில் ரூ .5,66,620 கோடியாக இருந்தது மொத்த விவசாய கடன். அப்போது என்.பி.ஏ ரூ .48,800 கோடி. அதாவது, 8.6 சதவீதம். எஸ்பிஐ ஆய்வு அறிக்கை இதை கூறியுள்ளது. தொழில்துறையின் வராக் கடன்களோடு ஒப்பிட்டால், விவசாய வராக்கடன் 82 சதவீதமாகும் என்று அறிக்கை கூறுகிறது.

வராக் கடன் கூடியுள்ளது
"வேளாண் என்.பி.ஏ கடந்த நிதியாண்டில் 12.4 சதவீதமாக இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் அறிவிக்கப்பட்ட ரூ .3.14 லட்சம் கோடி மதிப்புள்ள விவசாய கடன் தள்ளுபடிகளை கணக்கில் எடுத்தால், விவசாய என்.பி.ஏக்கள், அரசின் கருவூலம் மற்றும் வங்கிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதை அறியலாம். மகாராஷ்டிரா மாநில அரசு, அறிவித்த சமீபத்திய ரூ .45,000-51,000 கோடி வரையிலான விவசாய கடன் தள்ளுபடி (மூன்று ஆண்டுகளில் இரண்டாவது) இந்த சுமையை மேலும் அதிகரிக்கிறது, " என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ரூ.4 லட்சம் கோடி
2015ம் நிதியாண்டு முதல், 10 பெரிய மாநிலங்கள், மொத்தம், 3,00,240 ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. தமிழகம் 2017ம் நிதியாண்டில் ரூ.5,280 கோடி மதிப்புள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததும், இதில் வருகிறது. ஆந்திரா, ரூ.24,000 கோடி, தெலுங்கானா, ரூ.17,000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு இதற்கு காரணமாக கூறப்பட்டது. 2008ம் நிதியாண்டு முதல் இதுவரை ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா
இந்த நிதியாண்டில், மகாராஷ்டிரா ரூ .34,020 கோடியை தள்ளுபடி செய்தது, உத்தரபிரதேசம் ரூ .36,360 கோடி, பஞ்சாப் ரூ .10,000 கோடி மற்றும் கர்நாடகா ரூ .18,000 கோடி தள்ளுபடி செய்தன. ராஜஸ்தான் ரூ. 18,000 கோடி, மத்திய பிரதேசம், ரூ.36,500 கோடி மற்றும் சட்டீஸ்கர் ரூ.6,100 கோடி தள்ளுபடி செய்துள்ளன.

ஆச்சரியம்
மற்றொரு, முக்கியமான தகவல் என்னவென்றால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த ஆண்டில் விவசாயிகள் ஆர்வமாக புதிய கடன்கள் வாங்குவதுதானே இயல்பு. ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. புதிய கடன் வாங்குவதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 2018வது நிதியாண்டில்,, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகியவை விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்த பிறகு, புதிய கடன் வழங்கல், மைனஸில் போயுள்ளது. மகாராஷ்டிராவில் மைனஸ் 40 சதவீதம், கர்நாடகாவில், மைனஸ் 1 சதவீதம் மற்றும் பஞ்சாபில் மைனஸ் 3 சதவீதம் என விவசாய கடன் வினியோகம் குறைந்துபோயுள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.