பெங்களூரில் சிறிய 10க்கு 10 அறையில் ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் துவங்கி இன்று இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக வளர்ந்து இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்குச் சுமார் 17,000 கோடி ரூபாய் அளவிலான பணத்தைக் கொடுத்துள்ளது.
அடேங்கப்பா 17,000 கோடியா..?
சீனா-வை காப்பியடிக்கும் மீஷோ.. பிளிப்கார்ட், மின்திராவுக்குப் புதிய தலைவலி..!

ESOP திட்டம்
பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் திறன் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் முக்கியமான ஊழியர்களைத் தக்க வைக்கவும் நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ESOP எனப்படும் பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை வைத்திருக்கும்.

நிறுவன வளர்ச்சி
இத்திட்டத்தின் வாயிலாக நிர்வாகம் தீர்மானிக்கும் முக்கியமான ஊழியர்கள் அல்லது நிறுவன வளர்ச்சிக்கு ஆரம்பக்கட்டத்தில் இருந்து கடுமையாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குப் பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தின் வாயிலாக நிறுவனத்தின் பங்குகள் அளிக்கப்படும்.

பிளிப்கார்ட்
இப்படிப் பிளிப்கார்ட் தனது நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் இதுவரை சுமார் 17,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைக் கொடுத்துள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியாவின் டெக் நிறுவனங்களிலேயே ஊழியர்களுக்குப் பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் வாயிலாக அதிகப்படியான பங்குகளைக் கொடுத்தது பிளிப்கார்ட் தான்.

17,000 கோடி ரூபாய்
ஊழியர்களுக்கு 17,000 கோடி ரூபாய் கொடுத்து முதல் இடத்தைப் பிடித்த நிலையில் நாட்டின் பிற முன்னணி டெக் நிறுவனங்கள் ESOP வாயிலாக எவ்வளவு பங்குகளைக் கொடுத்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
- OYO - 7,569 கோடி ரூபாய்
- சோமேட்டோ - 5,639 கோடி ரூபாய்
- பேடிஎம் - 4,571 கோடி ரூபாய்
- நைகா 4,280 கோடி ரூபாய்
- பாலிசி பஜார் - 3,836 கோடி ரூபாய்
- பைஜூஸ் - 3,092 கோடி ரூபாய்
- ஓலா - 3,000 கோடி ரூபாய்
- ஸ்விக்கி - 1,589 கோடி ரூபாய்
- பார்மாஈசி - 592 கோடி ரூபாய்
- ஷேர்சாட் - 462 கோடி ரூபாய்
- அப்கிராட் - 427 கோடி ரூபாய்

பைபேக் திட்டம்
2020 -2021 ஆகிய இரு ஆண்டுகளில் பல முன்னணி டெக் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடவும், பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்த காரணத்தால் நிறுவனங்கள் ஊழியர்களிடம் இருக்கும் பங்குகளை வாங்கியது. இதன் மூலம் பல நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று கோடீஸ்வரராகி உள்ளனர்.

கோடீஸ்வர ஊழியர்கள்
இந்த வகையில் ஜூலை 2020 முதல் நவம்பர் 2021 வரையில் சுமார் 40 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ESOP வாயிலாகக் கொடுத்த பங்குகளை வாங்குவதற்காக 3,200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. அப்படின்னா ஊழியர்களுக்கு 3,200 கோடி ரூபாய்ப் பணமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.