இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மத்தியில் ஏற்கனவே கடுமையான போட்டி இருக்கும் நிலையில், தற்போது அமேசானின் கோட்டைக்குள் பிளிப்கார்ட் நுழைய உள்ளது.
பிளிப்கார்ட் இந்தியாவில் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட முடியாத காரணத்தால் தனது வர்த்தகத்தை மொத்தமாக அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட்-க்கு விற்பனை செய்து இயங்கி வரும் நிலையில், தற்போது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான முதலீட்டைத் திரட்டும் விதமாகப் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

பிளிப்கார்ட்
வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிளிப்கார்ட் இந்தியாவில் வர்த்தகம் செய்தாலும், அதன் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் சிங்கப்பூரில் தான் உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இது என்ன பெரிய விஷயமா..? ஆம்..

அமெரிக்காவில் ஐபிஓ
பிளிப்கார்ட் தனது ஐபிஓ-வை இந்தியா, சிங்கப்பூர் அல்லாமல் அமேசான் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் அமெரிக்கா பங்குச்சந்தையில் வெளியிட உள்ளது. ஈகாமர்ஸ் துறையில் அமெரிக்கா-வை தனது கோட்டையாகக் கொண்டு இயங்கி வரும் அமேசானுக்கு, பிளிப்கார்ட்-ன் முடிவு உண்மையில் அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாகவே உள்ளது.

பிரஷ்வொர்க்ஸ்
சமீபத்தில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரஷ்வொர்க்ஸ் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சிங்கப்பூர் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் அமெரிக்காவில் சுமார் 60-70 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.

கல்யாண் கிருஷ்ணமூர்த்தி
ஏற்கனவே பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களாகச் சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் இந்நிறுவனத்தின் வைத்திருந்த பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்து விட்ட நிலையில், பிளிப்கார்ட்-ன் முக்கிய முதலீட்டாளரான டைகர் குளோபல் நிறுவனத்தின் சார்பாகக் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இயங்கி வருகிறது.

நிர்வாக ஆதிக்கம்
இதன் மூலம் பிளிப்கார்ட்-ன் 70 பில்லியன் டாலர் ஐபிஓ-வில் இந்நிறுவனத்தில் பழைய முதலீட்டாளர்கள் பலர் முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிர்வாக ஆதிக்கத்தில் கணிசமான மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஹெல்த்கேர் மற்றும் டிராவல் புக்கிங்
பிளிப்கார்ட் ஏற்கனவே 50 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட திட்டமிட்ட நிலையில், ஹெல்த்கேர் மற்றும் டிராவல் புக்கிங் சேவை பிரிவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவிட்டு அதன் பின்பு ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள.

70 பில்லியன் டாலர் ஐபிஓ
இதன் வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் ஹெல்த்+ என்னும் செயலியை அறிமுகம் செய்த நிலையில் தற்போது 60-70 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.