டெல்லி : உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால் பல ஆயிரம் மக்கள் பலியாகி வரும் நிலையில், உலக அளவில் ஒவ்வொரு நாடும் பல லட்சம் கோடிகளை மக்களுக்காக ஒதுக்கி வருகின்றன.
இதே கொரோனாவால் இந்திய பொருளாதாரம் என்பது முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரங்களை கூட இழந்து தவித்து வருகின்றனர்.
ஆக மக்கள் தரப்பில் இருந்து, அரசிடம் இருந்து சில நிவாரன உதவிகள் எதிர்ப்பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், தங்கள் சம்பளம் மற்ற வருவாயை இழந்துள்ள நிலையில் வங்கிகளில் செலுத்தும் இஎம்ஐ மற்றும் வட்டி விகிதம் என அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் கோரரிக்கை வைக்கப்பட்டது. இது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை சரியாகி, நிலைமை சரியாகும் வரையில் இதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படி ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சில திட்டங்களை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் இந்தியாவில் தற்போது ஆரம்பித்துள்ள கொரோனா தாண்டவத்திற்கு மத்தியில், பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தான் எப்போது எந்தவொரு முக்கிய அறிவிப்பினை அறிவித்தாலும் நிச்சயம் அதில், பெண்களுக்கென சில சலுகைகள் இருக்கும். அந்த வகையில் இன்று வெளியிட்ட நிதி ஓதுகீட்டிலும், பெண்களுக்கான நிதி ஜன் தன் வங்கிக் கணக்கில் மாதம் 500 ரூபாய் என மூன்று மாதங்களுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 63 லட்சம் சுய உதவிக் குழுக்கள் இருக்கும் நிலையில், பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது அவர்கள் மட்டும் அல்லாது அவரது குடும்பங்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே கணவரை இழந்து தவித்து வரும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.