இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி வர்த்தகம் இன்று சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிற்கு உயர்ந்து அசத்தி வருகிறது. இந்நிலையில் இத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை மீதான வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி பல புதிய வர்த்தகத்தையும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருந்தாலும் மக்களின் பர்ஸ்-ஐ பதம்பார்த்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை நிறைவேற்றும் பட்சத்தில் இத்துறை வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும்.

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இத்துறை வளர்ச்சிக்காகப் பல நிறுவனங்கள் இன்னும் அதிகளவிலான ஆபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களைச் சேர்த்தும் வரும் அதேவேளையில் ஒவ்வொரு காலாண்டிலும் தொடர்ந்து அதிக நஷ்டத்தைப் பதிவு செய்து வருகிறது.

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு
ரெஸ்டாரென்ட் மற்றும் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடும் போது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி சேவை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அதே உணவை சுமார் 13 சதவீதம் அதிக வரி கொடுத்துச் சாப்பிடும் நிலை தற்போது உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்.

வரிக் குறைப்புக் கோரிக்கை
இந்நிலையில் ரெஸ்டாரென்ட் மற்றும் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை துறை மத்திய அரசிடம் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை ஆலோசனை செய்து வரும் மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும் பட்ஜெட் தாக்கலில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் உணவு டெலிவரி
இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி துறை பல தடைகளைத் தாண்டி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் வேளையில் வருடத்திற்கு 22 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது, இதுமட்டும் அல்லாமல் இத்துறை 2.94 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதீத வரி விதிப்பு
இந்த அதீத வரி விதிப்பால் உணவகங்களும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் அதிகளவிலான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக உணவகங்கள் கடும் வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகின்றனர்.

வர்த்தகப் பாதிப்பு
கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்பால் சுமார் 60 சதவீத வர்த்தகத்தை இழந்த ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் உணவகங்கள் இன்றளவிலும் 40 சதவீத வர்த்தகத்தை மட்டுமே திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைப்பதன் மூலம் இழந்த வர்த்தகத்தைத் திரும்பப் பெற முடியும்.