இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2021ஆம் ஆண்டில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
உலகில் வேறு எந்தப் பெரும் தொழிலதிபர்கள் போல் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 16.2 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.

எலான் மஸ்க், ஜெப் பெசோஸ்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டு வரும் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ் ஆகியோரை விடவும் நம்ம நாட்டுக் கௌதம் அதானி அதிகப் பணத்தை இந்த ஆண்டுச் சம்பாதித்து உள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்
ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி கௌதம் அதானி இந்த வருடம் உலகப் பணக்காரர்களை விட அதிகமாகச் சம்பாதித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

16.2 பில்லியன் டாலர் சொத்து
இதன் மூலம் 2021ல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஓரே வருடத்தில் 16.2 பில்லியன் டாலர் அதிகரித்து 50 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது. இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் கௌதம் அதானி இந்த வருடம் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

முகேஷ் அம்பானி
கௌதம் அதானியின் நண்பர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2021ல் பெரிய அளவிலான தடுமாற்றம் அடைந்துள்ள நிலையில் இந்த முகேஷ்-ன் சொத்து மதிப்பு 8.1 பில்லியன் டாலர் வரையில் மட்டுமே உயர்ந்துள்ளது.

கௌதம் ஆதானி நிறுவனப் பங்குகள்
இந்த வருடம் கௌதம் ஆதானியின் நிறுவனப் பங்குகளின் மதிப்புக் குறைந்தபட்சம் 50 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%, அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52 % அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி
மேலும் அதானி குழுமத்தில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாக விளங்கும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனப் பங்குகள் கடந்த வருடம் 500 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் 12 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

வர்த்தக விரிவாக்கம்
கௌதம் அதானி கடந்த சில மாதங்களாகத் தனது நிறுவனத்தின் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் துறைமுகம், விமான நிலையம், டேட்டா சென்டர், நிலக்கரி சுரங்கம் ஆகிய துறையில் மிகப்பெரிய தொயை முதலீடு செய்து பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி வருகிறார்.

முதலீடு திரட்டல்
இது மட்டும் அல்லாமல் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் டோட்டல் எஸ்ஏ முதல் வார்பர்க் பின்கஸ் நிறுவனங்கள் முதல் பல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டைத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.