இந்தியாவின் பெரும் பணக்காரராக உயர்ந்திருக்கும் கௌதம் அதானி பல ஆண்டுகளாகப் போராடி வந்த ஆஸ்திரேலியா நிலக்கரி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைப் பிரச்சனையைச் சரி செய்து அதிகப்படியான லாபத்திற்கு உயர்தர நிலக்கரியை ஏற்றுமதி செய்து வருகிறார்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கௌதம் அதானிக்கும் சரி அதானி குழுமத்திற்குச் சரி அடுத்தடுத்து வளர்ச்சி திட்டங்கள், புதிய வர்த்தகத் திட்டங்கள் எனப் பல முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பின் படி டாடா குழுமத்துடன் நேரடியாகப் போட்டிப்போடும் மிகப்பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் கௌதம் அதானி.
அதானி, அம்பானியின் புதிய புரட்சி.. இந்தியாவின் அடுத்த சகாப்தம் எப்படியிருக்கும்..!

அதானி - POSCO டீல்
ஏற்கனவே பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த POSCO என்னும் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தில் மிகப்பெரிய ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார் கௌதம் அதானி.

ஆட்டோமொபைல் துறை
இதைத் தொடர்ந்து தற்போது ஆட்டோமொபைல் துறைக்குள் முதல் முறையாக நுழையும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார் கௌதம் அதானி. அதானி குழுமத்தின் SB அதானி டிரஸ்ட் நிறுவனம் நிலம் மற்றும் தண்ணீரில் இயங்கும் வாகனங்களுக்கு அதானி என்ற பெயரை டிரேட்மார்க் ஆகப் பயன்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளது.
இதன் மூலம் அதானி குழுமம் ஆட்டோமொபைல் துறையில் இறங்குவது உறுதி செய்துள்ளது.

எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு
அதானி குழுமம் சமீபத்தில் தான் கிரீன் எனர்ஜி திட்டத்தில் இறங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது, தற்போது ஆட்டோமொபைல் துறையில் இறங்குவதற்காகத் திட்டமிட்டு உள்ள அதானி குழுமம் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவில் இறங்க முடிவு செய்துள்ளதாகவும், முதல் கட்டமாக எலக்ட்ரிக் வர்த்தக வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் கோச், பஸ், டிரக்
அதானி டிரேட்மார்க் பெயரில் அதானி குழுமம் முதல் கட்டமாக எலக்ட்ரிக் கோச், பஸ், டிரக் ஆகியவற்றைத் தயாரிக்கவும், அதை முதலில் தனது விமான நிலையம், துறைமுகம், மற்றும் இதர லாஜிஸ்டிக்ஸ் பிரிவு பணிகளுக்காகப் பயன்படுத்தி, அதைத் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் அதானி
கௌதம் அதானி புதிதாக உருவாக்க இருக்கும் புதிய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மூலம் எலக்ட்ரிக் கோச், பஸ், டிரக் மட்டும் அல்லாமல் இந்தியாவில் தற்போது மிகப்பெரிய தேவையாக மாறியிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் இறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்
இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் எல்க்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க அரசின் நிலத்தை வருமான பங்கீடு முறையில் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

PLI திட்டங்கள்
இதுமட்டும் அல்லாமல் அரசின் எலக்ட்ரிக் மொபிலிட்டி துறையைச் சார்ந்த பல PLI திட்டங்கள் அதானி குழு நிறுவனத்திற்குப் பெரிய அளவில் பயன்படும். மத்திய அரசு எலக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு உட்படப் பல தயாரிப்பு திட்டங்களுக்காக PLI திட்டத்தை அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட்
தற்போது அதானி குழுமத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புத் திட்டம் மூலம் இத்துறையில் குறிப்பாக எலக்ட்ரிக் வர்த்தக வாகன தயாரிப்பிலும், வர்த்தகத்திலும் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்டு ஆகிய நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியை உருவாக்கும்.

செலவுகள் குறைப்பு
இதேபோல் சிறிய ரக வர்த்தக வாகனங்களை டீசலில் பயன்படுத்தினால் கிலோமீட்டருக்கு 4 ரூபாய்ச் செலவாகிறது, ஆனால் எலக்ட்ரிக் சிறிய ரக வர்த்தக வாகனங்களை வெறும் 80 பைசாவில் இயக்க முடியும்.

இந்தியாவின் எதிர்காலம்
இது வர்த்தகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் மாற்றம் கொண்டு வரும் என்பதால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆட்டோமொபைல் துறையில் நேரடியாகவோ அல்லது பேட்டரி தயாரிப்பு, சார்ஜிங் ஸ்டேஷன், எலக்ட்ரிக் பவர் ட்ரைன் தயாரிப்பு என இறங்கத் திட்டமிட்டு வருகிறது.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் இந்தியாவின் எதிர்காலம்.