தீபாவளிக்கு முன் வரும் dhanteras பண்டிகையை வட இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த வருடமும் கொரோனா பாதிப்பு இருந்தாலும், பொருளாதார வீழ்ச்சி இருந்தாலும், தங்கம் விலை அதிகமாக இருந்தாலும் விற்பனையில் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பது தான் இந்தப் பண்டிகை காலத்தில் கிடைத்துள்ள சிறப்பான செய்தி.
கொரோனா காரணமாக மக்கள் எப்படித் தீபாவளி ஷாப்பிங்-கை ஆன்லைனில் செய்தார்களோ, அதேபோல் தங்கம் வாங்குவதையும் இந்த வருடம் ஆன்லைனில் அதிகளவில் செய்துள்ளார்கள்.
இதனால் ஆன்லைன் தங்க நகை மற்றும் ஆன்லைன் தங்க விற்பனை தளங்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று அசத்தியுள்ளது. சரி இந்தக் காலகட்டத்தில் தங்கம் வாங்கலாமா..? லாபம் கிடைக்குமா..? வாங்கப் பார்ப்போம்.

ஆன்லைன் ஷாப்பிங்
இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் மக்கள் அதிகளவில் தீபாவளி பண்டிகைக்காக ஆடை, உணவுப் பொருட்கள், பட்டாசு உட்பட அனைத்தையும் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கியுள்ளனர். கொரோனா தொற்று நாடு முழுவதும் இருக்கும் காரணத்தால் பெரு நகரங்களில் பல கோடி மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் வாயிலாகவே இந்த வருடத் தீபாவளியைக் கொண்டாடியுள்ளனர்.

உணவு பொருட்கள்
ஆன்லைன் சேவை இருக்கும் அனைத்து நகரங்களிலும் இந்தத் தீபாவளி பண்டிகையின் போது உணவு பொருட்கள் மீதான ஆன்லைன் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட், பிக்பேஸ்கட் போன்ற அனைத்து முன்னணி தளமும் அதிகளவிலான ஆஃபர்களை அறிவித்த காரணத்தால் ஆன்லைன் மூலம் உணவு பொருட்களின் வர்த்தகம் கிட்டதட்ட 40 முதல் 50 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

டைட்டன்
அந்த வகையில் டைட்டன் நிறுவனத்தின் கார்ட்லேன் தளத்தின் வர்த்தகம் இந்த வருட பண்டிகை காலத்தில் 2019ஆம் ஆண்டை விடவும் 40 சதவீதம் அதிக வாடிக்கையாளர்கள் வருகையும், 60 சதவீத அதிக வருவாயும் பெற்றுள்ளது.
அதேபோலே சிறு நகரங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 70 முதல் 80 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

புதிய சேவை
ஆன்லைன் தங்க நகை வர்த்தகத்தை மேம்படுத்த தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் சந்தையில் வந்துள்ளது. கடைகளுக்குச் சென்று நகைகளை வாங்கும் அனுபவத்தைப் போலவே ஆன்லைனில் கொடுக்க வேண்டும் என்பதற்காக விர்ச்சுவல் முறையில் நகைகளை அணிந்து பார்க்கும் சேவைகளும், சேட்பாட்கள் போன்ற பல சேவைகள் ஆன்லைன் தங்க நகை வர்த்தகத்திற்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

40 சதவீதம்
பொதுவாகத் தங்க நகை வியாபாரிகள் தங்களது வருடாந்திர வர்த்தகத்தில் சுமார் 40 சதவீதம் வர்த்தகத்தை dhanteras மற்றும் தீபாவளி பண்டிகையின் போது பெறுவார்கள். ஆனால் இந்த ஆண்டு அதிகப்படியான தங்கம் விலை மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாகத் தங்க நகை விற்பனை சற்று குறைந்துள்ளது.
ஆனால் ஆன்லைன் தங்க நகை விற்பனையாளர்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளனர்.

தங்கம் விலை
இன்றைய MCX சந்தையில் டிசம்பர் மாதத்திற்கான ஆர்டர்களின் விலை சரிவு பாதையில் உள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் டிசம்பர் மாதத்திற்கான தங்கம் ஆர்டர்கள் சரிவு பாதையில் 50,922 ரூபாய் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
இதேபோல் டிசம்பர் மாதத்திற்கான வெள்ளி விலை 0.20 சதவீத சரிவில் 63,608 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் பங்குச்சந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் காரணத்தால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதன் வாயிலாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு பாதையில் உள்ளது.

சர்வதேச சந்தை
ஆனால் சர்வதேச சந்தையில் ஸ்பாட் கோல்டு ரேட் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை என்பதால் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,40,841 ரூபாயாக இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,41,239 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதற்கு ரூபாய் டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் முக்கியக் காரணியாக உள்ளது.