கடந்த இரண்டு வாராங்களாகவே முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகின்றது.
இது தங்கம் வாங்க நினைபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரை தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று கூறி வந்த நிலையில், தற்போது குறையலாம் என்றும் சிலர் கணித்து வருகின்றனர். எனினும் இது எவ்வளவு குறையும். எப்போது வாங்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதோடு தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சரி வாருங்கள் பார்க்கலாம், தங்கம் விலை எவ்வளவு குறையும், சப்போர்ட் லெவல்கள் என்னென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
கடந்த வாரத்தில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றம் காணாவிட்டாலும், சந்தையின், இறுதி நாளன்று சரிவில் தான் முடிவடைந்துள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமையன்று அவுன்ஸூக்கு 1849.40 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்று குறைந்தபட்சமாக 1817.10 டாலர்களை தொட்டது. இது தான் கடந்த வாரத்தில் குறைந்தபட்ச விலையும் கூட. எனினும் அடுத்த நாளே அதிகபட்சமாக 1864 டாலர்களை தொட்டது. இது தான் கடந்த வாரத்தின் அதிகபட்ச விலையும் கூட. எனினும் வார முடிவான வெள்ளிக்கிழமையன்று 1827.85 டாலர்களாக முடிவுற்றது.
எனினும் வார கேண்டில் பேட்டர்னில் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளதோடு, மார்னிங் ஸ்டார் பேட்டர்னும் உள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் அவுன்ஸுக்கு 25.745 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 25.990 டாலர்களாகவும், குறைந்தபட்சமாக 24.365 டாலர்களகவும் குறைந்தது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளதோடு, மார்னிங் ஸ்டார் பேட்டர்னும் உள்ளது. இதனால் வெள்ளி விலையானது சற்று குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை
கடந்த வாரத்தத்தில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, 10 கிராமுக்கு 49,088 ரூபாயாக தொடங்கிய நிலையில், செவ்வாய்கிழமையன்று அதிகபட்சமாக 49,570 ரூபாய் வரையிலும், இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 48,537 ரூபாய் வரையிலும் வீழ்ச்சி கண்டது. முடிவில் 48,702 ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டு முடிவடைந்தது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பெரியளவில் மாற்றமில்லாமல் முடிவடைந்தது. இது கடந்த திங்கட்கிழமையன்று கிலோவுக்கு 63,603 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்று குறைந்தபட்ச விலையும் இதே 63,603 ரூபாயாக இருந்தது. இது தான் கடந்த வாரத்தில் குறைந்தபட்ச விலையாகும். அதிகபட்சமாக கடந்த வார வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 66848 ரூபாயாகவும் தொட்டது. எனினும் முடிவு விலையாக வெள்ளிக்கிழமையன்று 64,764 ரூபாயாக முடிவுற்றது.

தங்கம் விலை குறையலாம்
அதெல்லாம் சரி ஏற்கனவே கடந்த இரு வாரங்களாகவே தங்கம் விலையானது குறைந்து வரும் நிலையில், மீண்டும் விலை குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனரே எப்படி? எவ்வளவு குறையும். என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம். தங்கம் விலையானது தற்போதைய டிரெண்டில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. டெக்னிக்கல் அனாலிசிஸ் படி, அடுத்த சப்போர்ட் இடம் 1780.50 டாலர்களாகும்.

சப்போர்ட்
தங்கம் விலையானது தற்போது குறையும் விதமாக உள்ள நிலையில், அடுத்த சப்போர்ட் லெவல்கள் 1780.50 டாலர்களாகும். இதனையும் உடைத்து சென்றால் அடுத்தது 1705.20 டாலர்களை தொடலாம். அதாவது தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து 50 - 61.8% வரை வீழ்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்
ஒரு வேளை தங்கம் ஏற்றம் கண்டாலும் ரெசிஸ்டன்ஸ் லெவல்களாக 1962.50, 1973.30, 1991.60, 2008.50, 2032.50 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவு ஏற்றம் இல்லாவிட்டால், அதே அளவு சரிவினைக் காணலாம். அதே அளவு இறக்கத்தில் அழுத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
அமெரிக்காவின் பத்திர லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது டாலரின் மதிப்பினை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு ஏற்றத்தில் உள்ளது. இது தங்கம் விலையினை அழுத்தத்தில் தள்ளுகிறது. ஏனெனில் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைகின்றது. ஏற்கனவே இருக்கும் முதலீடுகளையும் வெளியே எடுக்க தூண்டுகிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது.

தங்கம் விலை இவ்வளவு குறைவா?
தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிப்ரவரி காண்டிரக்டில் 10 கிராம் 57,100 ரூபாயாக உச்சத்தினை தொட்டது. அதனுடன் ஒப்பிடும்போது கடந்த 5 மாதத்தில் சுமார் 8400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

செம சரிவில் வெள்ளி விலை
இதே போல வெள்ளி விலையும் முந்தைய ஆகஸ்ட் மாத உச்சத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 14,400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 10, 2020ம் அன்று மார்ச் மாத காண்டிராக்ட் வெள்ளி விலையானது 79147 ரூபாயினை தொட்டது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 64,764 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது ஆகஸ்ட் மாத உச்சத்தில் ஒப்பிடும்போது 14,383 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.