தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாக பலமான ஏற்றத்தினை கண்டு வந்தது. இதனால் தங்கம் விலை குறையவே குறையாதா? இனி குறைந்த விலையில் தங்கத்தினை வாங்க முடியாத என்று முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பம் இருந்து வந்தது.
தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வந்ததையடுத்து, வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, ஒரே நாளில் போதும் போதும் எனும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
குறிப்பாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு கிட்டதட்ட 2,100 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே வெள்ளியில் விலையானது 6,100 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது.

Comex தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், நேற்றோடு மூன்று தினங்களாக சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்னும் நல்ல சரிவினைக் கணடு வருகிறது. வெள்ளிக்கிழமையன்று மட்டும் அவுன்ஸூக்கு 63.70 டாலர்கள் குறைந்து, 1849.90 டாலர்களாக முடிவடைந்துள்ளது. இது கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலான கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களில் அந்த ஏற்றத்தினை சமன் செய்துள்ளது.

Comex வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் வெள்ளிக்கிழமையன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. சொல்லப்போனால் 6.49% சரிவினைக் கண்டுள்ளது. வெள்ளிகிழமையன்று 6.49% குறைந்து, 25.492 டாலர்களாக முடிவடைந்துள்ளது. தினசரி கேண்டில் பேட்டர்னில் மார்னிங் ஸ்டார் பார்ம் ஆகியுள்ளது என்று கூறியிருந்த நிலையில், நேற்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

MCX தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளதையடுத்து, இந்திய சந்தையிலும் தங்கம் விலை பலமான சரிவினைக் கண்டுள்ளது. நேற்று ஒரே அமர்வில் மட்டும் 10 கிராமுக்கு 2086 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 48,818
ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று இது ஒரே நாளில் 4% மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. வரும் வாரத்திலும் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

MCX வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் இந்திய சந்தையில் பலமான சரிவினைக் கண்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று கிலோவுக்கு 6,112 ரூபாய் குறைந்து, 63,850 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது
கிட்டதட்ட 9% சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. வெள்ளியின் விலை இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்ட கால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் இந்த இடத்தில் வாங்கலாம். மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலத்த சரிவினை கண்டு வந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் பலத்த சரிவினைக் கண்டது. இது அமெரிக்காவின் 10 வருட பாண்டுகளின் லாபம் 1% மேலாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் அதன் பக்கம் திரும்பியது. இது பாதுகாப்பு புகலிடத்தில் செய்திருந்த முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டியது. இதன் காரணமாக அதிகளவிலான முதலீடுகள், ஒரே சமயத்தில் வெளியேறிய காரணத்தினால் விலை குறைந்துள்ளது.

மீண்டும் ஒரு ஊக்கத்தொகை
அமெரிக்காவில் ஏற்கனவே இரண்டாம் கட்ட ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக பெரியளவில் ஊக்கத்தொகை அறிவிக்கப்படலாம் என்று, பெரியளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதே போல அமெரிக்காவின் விவசாயம் அல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை எட்டு மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பரில் அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு புகலிடம் தவிர்ப்பு
நல்ல லாபம் கொடுத்து வரும் பத்திர முதலீடுகளுக்கு மத்தியில், வட்டியில்லாத பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மீதான ஆர்வத்தினை முதலீட்டாளர்களுக்கு குறைத்துள்ளது. இது தங்கத்தின் விலையில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதில் தங்கம் மட்டும் அல்ல, மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களாக வெள்ளி, பல்லேடியம் உள்ளிட்ட உலோகங்களின் விலையும் பலமான சரிவினைக் கண்டுள்ளது.

டாலர் Vs தங்கம்
பத்திர லாபம் அதிகரித்துள்ள அதே நேரத்தில் டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது குறையத் தொடங்கியுள்ளது. மேலும் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக இருக்கும் தங்கமானது, ஊக்கத்தொகை காரணமாக பணவீக்கம் கட்டுக்குள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனி தங்கத்தினை வாங்கலாமா?
நிச்சயம் நீண்டகால நோக்கில் தங்கத்தினை வாங்க நினைப்பவர்கள் தங்கத்தின் முதலீடுகளை செய்யலாம். ஆனால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் திங்கட்கிழமையன்று வர்த்தகத்தில் எவ்வாறு உள்ளதை என்பதனை பொறுத்து வாங்கலாமா? வேண்டாமா? எனத் தீர்மானிக்கலாம்.