உலக நாடுகள் முழுவதும் முதலீட்டாளர்களுக்குப் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையின் மீதான முதலீட்டில் அதிகளவிலான லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கம் மீது இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இதனால் கடந்த இரண்டு வாரக் காலமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தால் சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் தங்கம் வாங்க நகைக் கடைகளுக்குக் குவிந்து வருகின்றனர்.
2020ல் இனி சாமானியர்கள் தங்கம் வாங்க முடியுமான என்ற நிலை உருவானபோது நகைக் கடைகள் காலியாக இருந்தது, ஆனால் இன்று தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
குறிப்பாகப் பெரு நகரங்களை விடவும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் அதிகளவிலான மக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

MCX சந்தை விலை நிலவரம்
வாரத்தின் கடைசி நாளான இன்று MCX சந்தையில் ஏப்ரல் மாதத்திற்கான பியூச்சர் ஆர்டர் விலை 0.28 சதவீதம் சரிந்து 10 கிராம் தங்கம் 44,418 ரூபாயாகக் குறைந்துள்ளது. காலை வர்த்தகத்தில் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் மாலையில் கணிசமான உயர்வைச் சந்தித்தாலும் சரிவிலேயே உள்ளது. இதேவேளையில் வெள்ளியின் விலை வர்த்தக முடிவில் 0.06 சதவீதம் அதிகரித்து 65,960 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தை விலை
இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று 1,700 டாலர் அளவீட்டில் இருந்து 1,692 டாலருக்கு சரிந்துள்ளது. இதேபோல் ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேசச் சந்தையில் 1,23,276 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

24 கேரட் தங்கம் விலை
இந்நிலையில் இன்று இந்திய ரீடைல் சந்தையில் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 47 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் விலை 4,443 ரூபாயாகவும், 10 கிராம் தங்கம் 44,430 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் சொக்கத் தங்கம் விலை கிராமுக்கு 47 ரூபாய்க் குறைந்தது சாமானியர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஆபரணத் தங்கம் விலை
இதேபோல் சென்னையில் இன்று ஆபரணத் தங்கமான 22 கேரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து 4,184 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சரவன் தங்கம் விலை 264 ரூபாய் குறைந்து 33,472 ரூபாய் வரையில் சரிந்துள்ளது.

வெள்ளி விலை
மேலும் வெள்ளியின் விலை இன்றும் கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் மக்கள் சேமிப்புக்காகவும், சுப நிகழ்ச்சிக்காகவும் அதிகளவிலான தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்.