நடுத்தர மக்களையும், சாமானியர்களையும் பயமுறுத்தி வந்த தங்கத்தின் விலை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் பெரும் முதலீட்டாளர்கள் உதறி தள்ளிய காரணத்தால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வருகிறது.
சொல்லப்போனால் தங்கத்தை வாங்குவதற்குத் தற்போது ஆள் இல்லை என்று சொன்னாலும் மிகையில்ல, காரணம் பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது பத்திர சந்தை முதலீடு, பங்குச்சந்தை முதலீடு, கிரிப்டோ சந்தை முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர்.
வெறும் 55 பைசா வட்டியில் வீட்டு கடன்.. போட்டிப்போட்டு வட்டியை குறைக்கும் வங்கிகள்..!

தங்க முதலீடும், சேமிப்பும்
தங்கத்தை விடவும் குறைந்த காலகட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும் சூழ்நிலையில் பிற முதலீட்டுச் சந்தையில் இருக்கும் காரணத்தால் பாதுகாப்பான முதலீடு எனக் கருதப்படும் தங்கம் தற்போது தனது ஆதிக்கத்தை இழந்துள்ளது.
இதுதான் சேமிப்புக்காகவும், குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைக்காகத் தங்கத்தை வாங்குவோருக்குச் சரியான நேரம்.

இந்திய குடும்பங்கள் தவிப்பு
தங்கம் விலை 2020ல் தாண்டவம் ஆடியது யாராலும் மறக்க முடியாது, சாமானியர்கள் இனி தங்கம் வாங்க முடியுமான என்ற மோசமான நிலை உருவானது. இந்தியாவில் தங்கம் இல்லாமல் எந்தச் சுப காரியங்களும் நடக்காது என்பதால் நம்முடைய வாழ்க்கையில் தங்கம் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை. இப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்த காரணத்தால் மக்கள் கவலையில் அடைந்தனர்.

முதலீட்டுச் சந்தை
ஆனால் கடந்த 4 மாதத்தில் மொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது. கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகளைச் சரி செய்ய முதலீட்டாளர்கள் அதிகளவிலான தொகையைத் தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீடு செய்த காரணத்தால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.

சாதகமான சூழ்நிலை
ஆனால் தற்போது பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், பத்திர சந்தை மற்றும் பங்குச்சந்தையில் சராசரி அளவுகளை விடவும் அதிகளவில் லாபம் கிடைக்கும் காரணத்தால் பெரும் முதலீட்டாளர்கள் முதல் ரீடைல் முதலீட்டாளர்கள் வரையில் இதில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் தற்போது தனது பொழிவை இழந்து தவிக்கிறது.

உச்சவிலையில் 11,000 ரூபாய் சரிவு
2020ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 10 கிராம் 24 கேரட் தங்கம் 56,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களின் முதலீட்டு ஈர்ப்பு மாறிய காரணத்தால் தங்கம் விலை தனது உச்ச அளவில் இருந்து சுமார் 11,000 ரூபாய் குறைந்துள்ளது. இது ரீடைல் முதலீட்டாளர்களும், சேமிப்பிற்காகத் தங்கம் வாங்கும் சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

MCX சந்தை நிலவரம்
இந்திய MCX சந்தையில் ஏப்ரல் மாதம் முடியும் கோல்டு பியூச்சர் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் கோல்டு பியச்சர்ஸ் விலை 0.38 சதவீதம் வரையில் சரிந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் 45,374 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் ஏப்ரல் மாத பியூச்சர்ஸ் விலை 054 சதவீதம் சரிந்து 68,838 ரூபாய்க்கு சரிந்துள்ளது.

சர்வதேச சந்தை வர்த்தகம்
இதேபோல் சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,740 டாலரில் இருந்து 1,732 டாலருக்கு குறைந்துள்ளது. இந்தச் சரிவு தொடர்வது முதலீட்டாளர் தங்க முதலீட்டு சந்தையை விட்டு வெளியேறுவது தெரிகிறது. மேலும் மார்ச் 2ஆம் தேதி வர்த்தக முடிவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,715 டாலர் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையில் சரிவு
இதேவேளையில் கடந்த வாரம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மற்றும் பத்திர சந்தையில் முதலீடு செய்வதற்காக இந்திய சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் வெளியேறிய நிலையில், இந்திய முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ஓரே நாளில் 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்ததது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

ரூபாய் மதிப்பும் தங்கமும்
இந்தியாவில் விற்பனை மற்றும் வர்த்தகம் செய்யப்படும் பெரும்பாலான தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் டாலரின் மதிப்புத் தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் மும்பை பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி முதலீட்டின் வாயிலாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 74 ரூபாய் வரையில் உயர்ந்தது.

ரூபாய் மதிப்பு
ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் தங்கம் விலையைச் சரிவடைந்த போதும் கடந்த வாரம் இந்தியாவில் கணிசமாக உயர்ந்தது. ஆனால் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.07 ரூபாய் வரையில் குறைந்துள்ள காரணத்தால் தங்கம் விலை இந்தியாவில் குறைந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..!