பெங்களூர்: ஆடம்பர வசதி கொண்ட, Golden Chariot ரயில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் இயங்கத் தொடங்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கோல்டன் சேரியட் ரயிலை பிரபலப்படுத்தவும், இயக்கவும் கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.டி.டி.சி) இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐ.ஆர்.சி.டி.சி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று, இதற்காக நடைபெற்ற துவக்க விழாவின்போது, இந்த ரயில் கர்நாடகா மற்றும் பிற தென் மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி தெரிவித்தார்.
மருத்துவமனை, குடிநீர் திட்டம், நெடுஞ்சாலை.. இலங்கையில் சீனா முழு ஆதிக்கம்.. முதலீடுகள் குவிப்பு

அமைச்சர் பேச்சு
சுரேஷ் அங்கடி இதுபற்றி கூறுகையில், ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் கே.எஸ்.டி.டி.சி ஆகியவை கோல்டன் சேரியட் ரயிலின் தேதிகளை சரியா ஒருங்கிணைத்து, வைத்திருக்க வேண்டும், இதனால் அனைவரும் பயணம் செய்ய முடியும். நாட்டில் 15 சுற்றுலாத் தலங்களை இணைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றப்போகிறது கோல்டன் சேரியட், என்று அவர் கூறினார்.

கர்நாடக அரசு முயற்சி
2008 ஆம் ஆண்டில் இயக்கத்தை தொடங்கிய கோல்டன் சேரியட், ரயில், கர்நாடக அரசு மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியின் பலனாகும். இந்த ரயிலில், 44 விருந்தினர் அறைகள் சகல வசதிகளோடு இருக்கும். 18 கோச் கொண்ட நீளமான ரயில் இதுவாகும். குறைந்தபட்சம், 84 பயணிகள் ஒரே நேரத்தில் ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும்.

தென் இந்திய சொகுசு ரயில்
கோல்டன் சேரியட் தென்னிந்தியாவின் ஒரே சொகுசு ரயிலாக விளங்கியது. ஆனால், அதிக வருவாய் இழப்புகள் காரணமாக அதன் சேவைகளை தற்காலிகமாக கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில்தான், இப்போது, கோல்டன் சேரியட் ரயிலை பிரபலப்படுத்தவும், இயக்கவும் கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.டி.டி.சி) இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐ.ஆர்.சி.டி.சி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் சேவைகள்
அடுத்த ஆண்டு மார்ச் முதல் மறுபடியும் கோல்டன் சேரியட், சேவைகள் தொடங்கியதும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் பிற தென்னிந்திய மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக பயணிக்க துவங்கும். பந்திப்பூர், மைசூரு, ஹலேபீடு, சிக்மகளூர், ஹம்பி, பிஜாப்பூர் மற்றும் கோவா ஆகியவற்றின் வழியாக பயணிக்க திட்டம் உள்ளது.
மகாராஜா ரயில்
2010 முதல், ஐ.ஆர்.சி.டி.சி அதி-ஆடம்பரமான மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி வருகிறது. இதேபோல், ராஜஸ்தானில் பேலஸ் ஆன் வீல்ஸ் சொகுசு ரயில் உள்ளது. மகாராஷ்டிராவில் டெக்கான் ராணி சொகுசு ரயில் உள்ளது. தென் இந்தியாவின் சுற்றுலாவை மேம்படுத்த கோல்டன் சேரியட் உதவும், இதன் மூலம், சுற்றுலா வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.