மும்பை: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் இந்தியாவில், இன்சூரன்ஸ் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.
இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம், உலகம் முழுவதும் 28 நாடுகளில் இயங்கி வருகின்றது.
இந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு இலக்கு வைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..!

பங்கு விற்பனை செய்யலாம்
இது மட்டும் அல்ல, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளையும் இதே போன்று விற்பனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது எப்போது என்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியினை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

பொது பங்கு வெளியீடு
கடந்த 2017ம் ஆண்டில் நியூ இந்தியா மற்றும் ஜிஐசி நிறுவனங்களில் 15% பங்குகளை அரசாங்கம் விலக்கிக் கொண்டது. ஜிஐசியின் பங்கு விற்பனை மூலம் 11,370 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. இதே நியூ இந்தியா நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு மூலம் 9,600 கோடி ரூபாயினையும் திரட்டியது. இந்த இரு நிறுவனங்களும் தற்போது அதன் வெளியீட்டு விலைக்கு கீழ் வர்த்தகம் செய்கின்றன.

பங்குகள் சரிவுக்கு என்ன காரணம்?
இதற்கு காரணம் முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையே என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த பங்குகளின் மதிப்பு புத்தக மதிப்புக்கு 20% தள்ளுபடியில் உள்ளது. அதோடு இந்த நிறுவனங்களின் பெரும்பகுதி பங்குகள் பொதுத்துறை நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இதனால் இந்த பங்குகளில் பணப்புழக்கம் குறைவாகவே காணப்படுகின்றன.

பங்கு விற்பனை அரசுக்கு உதவும்
இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த பங்குகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இது அரசாங்கத்தின் வருவாயை இந்த நெருக்கடியான நேரத்தில் உயர்த்தும்.
GIC Re சந்தை மதிப்பானது 21,333 கோடி ரூபாயாகும். இதே நியூ இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 17,000 கோடி ரூபாயாகும். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 10% பங்கு விற்பனை மூலம் அரசுக்கு, 4,000 கோடி ரூபாய் கிடைக்கும்.

செபியின் விதிமுறை
பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும். ஆனால் இந்த கொரோனா காலத்தில் செபி இந்த விதிமுறைகளில் தளர்வு அளித்தது. மேலும் இந்த காலகட்டத்தில் நிறுவனங்களுக்கு எதிராக என்டஹ் நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் கூறியிருந்தது. செபி விதிமுறைகளின் படி ஒரு பொதுத்துறை பங்கினை வெளியிட்ட பின்னர், பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்குள் எட்ட வேண்டும் என்ற காலகெடு உள்ளது.