இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதித்து வரும் நிலையில், தற்போது பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரி மற்றும் மாநில அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியை முழுமையாக நீக்கி விட்டு ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியாவில் அனைத்து வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும் நிலையில் பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் மீது மட்டும் பழைய வரி விதிப்பு முறையில் கீழ் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில் நாடு முழுவதும் அனைத்துத் துறை மற்றும் வர்த்தகத்தில் செயல்பாட்டில் இருக்கும் ஜிஎஸ்டி வரியை பெட்ரோலியம் பொருட்கள் மீது விதிக்கப்படுவதன் மூலம் இதன் விலை பெரிய அளவில் குறையும்.
ஜிஎஸ்டி வரி 2017, ஜூலை 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் 5 பெட்ரோலியம் பொருட்கள் மீது மட்டும் இன்னும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் தொடர்ந்து பழைய வரி விதிப்பின் கீழ் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் படி 279A(5) பிரிவின் கீழ் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் ஏற்கனவே பெட்ரோலியம் க்ரூட், ஹைய் ஸ்பீடு டீசல், மோட்டார் ஸ்பிரிட், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகிய 5ம் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஆனால் மத்திய மாநில அரசுகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் எப்போது இந்த 5 பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை. பல வருடங்களாக இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும் இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை.
அடுத்த சில நாட்களில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த 5 பெட்ரோலியம் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்படுமா..?