ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்தே, இந்தியாவை பல கோணங்களில் சீண்டிக் கொண்டு இருக்கிறது அமெரிக்கா.
H-1B விசா தொடங்கி கொரோனாவின் ஆரம்ப காலங்களில், இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydrochloroquine) மருந்துகளை வாங்கியது வரை, அமெரிக்கா இந்தியாவை ஒரு விதமாகத் தான் டீல் செய்கிறது.
போதாக்குறைக்கு இப்போது பல்வேறு வேலை வாய்ப்பு தொடர்பான விசாக்களில் கை வைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

H-1B விசா
அமெரிக்காவின் வேலை வாய்ப்பு விசாக்களில் மிகவும் முக்கியமான விசா இந்த H-1B. அமெரிக்கா வழங்கும் H-1B விசாக்களில் சுமாராக 70 சதவிகித விசாக்களை இந்தியர்கள் (இந்திய ஐடி கம்பெனிகள் வழியாக) தான் வாங்கி அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். சமீப காலங்களில் கூட H-1B விசா விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது அமெரிக்கா. இப்போது மாற்றங்கள் பிரச்சனை அல்ல, விசாவையே பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது அமெரிக்கா.

அமெரிக்க செய்தி
இப்போது அமெரிக்க அரசு, தங்கள் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருப்பதால், H-1B விசா உட்பட, பல வகையான வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட விசாக்களை ரத்து செய்ய ஆலோசித்துக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்க அதரப்பு என்ன சொல்கிறது?

அமெரிக்க தரப்பு
"அமெரிக்க அரசு நிர்வாகம், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் வேலை தேடும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க, பல யோசனைகளை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை" என அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாளர் ஹோகன் கிட்லி (Hogan Gidley) சொல்லி இருக்கிறார்.

இந்திய பங்குச் சந்தையில் எதிரொலி
இந்த செய்தி வந்தது தான் தாமதம். இந்திய ஐடி கம்பெனிகளுக்கு ஜலதோசம் பிடித்தது போல் ஆகிவிட்டது. நிஃப்டியில் ஐடி இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் டாப் 10 ஐடி கம்பெனிகளில், ஒரே ஒரு பங்கு கம்பெனி தவிர, மற்ற கம்பெனிகளின் பங்கு விலை சுமாராக 0.07 % முதல் 3.07 % வரை சரிவைச் சந்தித்தன.

அதிகம் சரிந்தவைகள்
டெக் மஹிந்திரா 3.07 % விலை சரிந்து இருக்கிறது, விப்ரோ 2.25 % விலை சரிந்து இருக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளின் விலை 1.84 % மற்றும் டாடா கன்சல்டன்சி சரிவீசஸ் கம்பெனி பங்குகளின் விலை 1.45 சதவிகிதமும் சரிந்து இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் நிஃப்டி ஐடி இண்டெக்ஸ் சுமாராக 1.48 % சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த பங்கு விலை சரிவால் ஐடி கம்பெனிகளின் சந்தை மதிப்பு பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் சரிந்து இருக்கும்.