இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் ஹெச்சிஎல் நிறுவனம் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது ஊழியர்களைக் குஷிப்படுத்தும் வகையில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மூலம் இந்திய ஐடி துறையில் புதிதாகப் போட்டி உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை, ஏற்கனவே ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடி வரும் நிலையில் ஹெச்சிஎல்-ன் இந்த அறிவிப்பு புதிய தலைவலியாக மாறியுள்ளது.

ஹெச்சிஎல் டெக்
மார்ச் காலாண்டில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த லாபம் 226 சதவீதம் அதிகரித்து 3593 கோடி ரூபாயாகவும், வருமானம் 15.05 சதவீதம் அதிகரித்து 22,597 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஐடி துறையில் தற்போது அதிகம் கவனிக்கப்படும் காரணியாக மாறி வரும் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மார்ச் காலாண்டில் 21.9 சதவீதமாக மாறியுள்ளது.

ஊழியர்கள் வெளியேற்றம்
இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது ஊழியர்கள் வெளியேற்றத்தின் பாதிப்பைக் குறைக்க அதிகப்படியான பிரஷ்ஷர்களைப் பணியில் அமர்த்தி வரும் நிலையில், இப்போதும் இந்தப் பிரிவிலும் போட்டி அதிகரித்துள்ளது. இப்பிரிவு போட்டியில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதற்காகப் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம்.

பிரஷ்ஷர்களின் சம்பளம்
ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான விவி அப்பாராவ் கூறுகையில், 2022ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் சேரும் பிரஷ்ஷர்களுக்கு அளிக்கப்படும் வருடாந்திர சம்பளமான 3.5 லட்சம் ரூபாயில் இருந்து 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் புதிய சம்பள உயர்வு திட்டமும் நிறுவப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை
இந்த அறிவிப்பு மூலம் ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேரும் பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க உள்ளது. டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனமும் பிரஷ்ஷர்களின் சம்பளம் உயர்த்தி இருந்தாலும் அது முன்னணி கல்லூரி மாணவர்களுக்கு, தொழில்நுட்ப திறன் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் ஹெச்சிஎல் அனைத்து பிரஷ்ஷர்களின் சம்பளத்தையும் உயர்த்தியுள்ளது.

சம்பள உயர்வு, பதவி உயர்வு
ஹெச்சிஎல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம் அனைத்து நிறுவனங்களும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த வருடம் அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வையும், பதவி உயர்வையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்திற்கும் முக்கியமான காரணம் அட்டிரிஷன் ரேட்.