சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனரும், இந்தியருமான கீதா கோபிநாத் தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகம் கொள்கை ஆகியவற்றைக் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிடுவதன் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றவர்.
சர்வதேச நாணய நிதியம் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரக் கொள்கை வடிவமைப்பில் மிக முக்கியப் பங்கு வகிப்பது மட்டும் அல்லாமல் பல நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி பணிகளுக்காகக் கடன் வழங்கும் பணிகளும் செய்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் புதிய உச்சம்..!
இந்த முக்கியமான IMF அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் பொறுப்பில் இருப்பவர் தான் கீதா கோபிநாத்.

கீதா கோபிநாத்
IMF அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் பொறுப்பில் இருந்து கீதா கோபிநாத் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தமாக ஐஎம்எப் அமைப்பில் இருந்து வெளியேறுகிறார். இதைத் தொடர்ந்து அவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தனது பணியைத் துவங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம்
மைசூரில் பிறந்த 49 வயதான கீதா கோபிநாத் ஒரு இந்திய அமெரிக்கர், இவர் 2019ல் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக பணியில் சேர்வதற்கு முன்பு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ஸ்வான்ஸ்ட்ரா பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வந்தார்.

3 வருட பணி
ஹார்வார்ட் பல்கலைக்கழகம் இவருடைய திறனையும் பணிகளையும் பாராட்டும் விதமாகக் கீதா கோபிநாத்-ன் விடுமுறைக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தது. இதன் மூலம் தலைமை பொருளாதார வல்லுனர் பதவியில் 3 வருடம் பணியாற்ற முடிந்தது.

ஐஎம்எப் நிர்வாகத் தலைவர்
கீதா கோபிநாத் பணியிடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்கவும், தகுதியானவரை நியமிக்கவும் தேடுதல் பணி துவங்கியுள்ளதாகவும் ஐஎம்எப் நிர்வாகத் தலைவர்
கிறிஸ்டலினா ஜார்ஜீவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் கீதா கோபிநாத் பணியை மிகப்பெரிய அளவில் பாராட்டியுள்ளார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா.

முதல் பெண்
கீதா கோபிநாத் இந்தியர் என்பது மட்டும் அல்லாமல் IMF அமைப்பின் முதல் பெண் தலைமை பொருளாதார வல்லுனர் என்பது மிக முக்கியமானதாக உள்ளது. இதன் மூலம் புதிய வரலாற்றையும் கீதா கோபிநாத் உருவாக்கியுள்ளார்.

கீதா கோபிநாத் கல்வி
1971ஆம் ஆண்டு மலையாள பெற்றோர்களுக்கு மகளாக மைசூரில் பிறந்த கீதா கோபிநாத், கொல்கத்தாவில் பள்ளியும், டெல்லி லேடி ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டமும், டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் மற்றும் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அமர்தியா சென்
2001ல் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கீதா கோபிநாத் பிஹெச்டி பட்டமும் பெற்றார், அதன் பின்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். உலகிலேயே மிதப்பு மிக்க கல்லூரியாக அறியப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்-க்கு அடுத்து 3வதாக ஒரு இந்தியர் பணியாற்றுகிறார் என்றால் அது கீதா கோபிநாத் தான்.