சரக்கு மற்றும் சேவை, செல்லமாக ஜிஎஸ்டி வரி, கடந்த ஜூலை 01, 2017 அன்று நடைமுறைக்கு வந்தது. ஒரே தேசம் ஒரே வரி என்பது தான் இந்த ஜிஎஸ்டியின் பெரு முழக்கமாக இருந்தது.
இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது, விலை வாசி குறையும், பொருளாதாரம் வளரும், ஒரே நாடு ஒரே வரி என்பதால் வர்த்தகம் வளரும் என பல விஷயங்களைச் சொன்னார்கள்.
ஆனால் இப்போது சர்வதேச பன்னாட்டு நிதியமான IMF- அமைப்பே, ஜிஎஸ்டி பற்றி சில விஷயங்களைச் சொல்லி நமக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள்
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் சார்பில் ருட் டி மொய்ஜ் (Ruud de Mooij), அர்பிந்த் மோடி (Arbind Modi), லி லியூ (Li Liu), தினர் பிரிஹர்தினி ( Dinar Prihardini), ஜுஆன் கார்லோஸ் பெனிட்ஸ் ( Juan Carlos Benitez) என ஐந்து பேர் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். "India's resource mobilization for next five years" என்கிற தலைப்பில், இவர்கள் ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள்.

ஆய்வு
அந்த ஆய்வில், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த ஜிடிபி உடன் ஒப்பிட்டால், இந்தியாவுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் 8.2 சதவிகிதம் வரலாம், அந்த அளவுக்கு, இந்தியாவில் வாய்ப்பு இருப்பதாகக் கணித்து இருந்தார்கள். ஆனால் எதார்த்தத்தில் வெறும் 5.8 சதவிகிதம் தான் வந்து இருக்கிறதாம்.

பின் தங்கி இருக்கிறது.
இந்த 5.8 சதவிகிதம் என்பது மற்ற வளரும் நாடுகளோடு ஒப்பிட்டால் நல்ல நம்பர் தான் என்றாலும், இந்தியாவுக்கு பன்னாட்டு நிதியம் கணித்த 8.2 சதவிகிதத்தை விட குறைவாக் இருப்பதைச் சுட்டிக் காட்டி இருக்கிறது. ஆக மத்திய அரசுக்கு ஜிஎஸ்டியால் வர வேண்டிய பலன்கள் இன்னும் முழுமையாக வரவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஏன் குறைவு
சர்வதேச பன்னாட்டு நிதியம் கணித்து இருந்த ஜிஎஸ்டி வருவாய் அளவுக்கும், எதார்த்தத்தில் வந்த அளவுக்கும் ஏன் வேறுபாடுகள் இருக்கிறது என்பதற்கு சில காரணங்களைப் பட்டியல் போட்டு இருக்கிறார்கள். அதில் முதல் விஷயமாக, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுத்து இருப்பதை முதல் காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

வரிச் சலுகைகள்
உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கொடுத்து இருப்பதற்கான விலை, இந்திய ஜிடிபியில் 0.4 சதவிகிதமாக இருக்கும் என IMF சொல்லி இருக்கிறார்கள். இந்த பிரச்னையை சரி செய்ய, ஜிஎஸ்டியை வசூல் செய்துவிட்டு, நேரடி மானிய திட்டத்தைப் போல, உண்மையாகவே அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு மட்டும் பணத்தைக் கொடுத்து இருக்கலாம் என்கிறார்கள்.

பாஸ்மதி அரிசி
பாஸ்மதி அரிசி சாப்பிடுபவர்கள் எல்லாம் அடித்தட்டு மக்கள் எனச் சொல்ல முடியாது தானே. இந்த உணவு பொருட்களுக்கு கொடுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கை, பாஸ்மதி அரிசி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொண்டு, வரி செலுத்தாமல் இருக்கிறார்களாம். இதை இந்திய அதிகாரிகள் அடங்கிய கமிட்டியே அரசுக்குச் சொல்லி இருக்கிறார்களாம்.

டிசைன் சொதப்பல் 1
இந்தியாவில் கொண்டு வந்து இருக்கும் ஜிஎஸ்டி, பல வரி விகிதங்களைக் கொண்டது. பொதுவாக ஜிஎஸ்டி என்றாலே பல நாடுகளிலும் ஒன்று அல்லது இரண்டு வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்தியாவிலோ 5, 12, 18, 28 என நான்கு வரி விகிதங்கள்.

மற்ற வரி விகிதங்கள்
இது போக தங்கத்துக்கும், ரியல் எஸ்டேட்டுக்கும் தனி ஜிஎஸ்டி வரி விகிதங்கள் என பல வரி விகிதங்கள் + இது போக சொகுசு பொருட்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு தனி செஸ், இருப்பதால் குழப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனச் சொல்லி இருக்கிறது IMF.

டிசைன் சொதப்பல் 2
இந்தியாவில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் தங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்து கொண்டால் போதும்.
இவைகளை எல்லாம் IMF ஜிஎஸ்டியின் டிசைன் சொதப்பலாகவே பார்க்கிறது. இது போக வேறு சில பிரச்னைகளால், ஜிஎஸ்டி வரி செலுத்தியவர்களுக்கு ரீஃபண்ட் கொடுப்பதில் ஏகப்பட்ட சொதப்பல்கள் நடந்து இருப்பதாகச் சொல்கிறது IMF.

டிசைன் சொதப்பல் 3
மேலே சொன்னவைகள் எல்லாம் போக, ஜிஎஸ்டியை எலெக்ட்ரானிக் ஃபைலிங் செய்வது, இ-வே பில் மூலம் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது, இன்வாய்ஸ்களை மேட்ச் செய்வது போன்றவைகள் எல்லாமே பெரிய தலை வலியாக இருப்பதாக வர்த்தகர்களும், வியாபாரிகளும் சொல்கிறார்கள்.

என்ன செய்யப் போகிறது அரசு
அதோடு இப்படி படிவங்களை நிரப்புவது மற்றும் இ வே பில் போன்ற வேலைகளுக்கு Compliance Cost வேறு அதிகரிப்பதாகச் சொல்கிறது சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF). IMF அமைப்பே புட்டு புட்டு வைத்துவிட்டது. இனி என்ன சொய்யப் போகிறது மத்திய அரசு?