மத்திய அரசு சமீபத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில் அந்த தடை நீக்கப்படுமா? என்பது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
கோதுமை விலையை உள்நாட்டில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி தடை விதித்தது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமை விலை உயர்ந்தது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஏற்றுமதிக்கு தடை
கோதுமை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடை குறித்து மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தடை நீக்கம் இல்லை
இந்த நிலையில் இன்று சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், 'தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது என்றும் அவ்வாறு தடையை நீக்கினால் அது கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றும் கூறினார்.

ஏழை நாடுகளுக்கு கோதுமை
ஆனால் அதே நேரத்தில் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கோதுமையை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயித்த இலக்கு
2022 - 23 ஆம் ஆண்டில் கோதுமை ஏற்றுமதியை ஒரு கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து நிலையில் திடீரென ஏற்றுமதிக்கான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது, கோதுமை விவசாயிகளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ப.சிதம்பரம் கருத்து
கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிப்பது கோதுமை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போதுதான் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் மோசமானது என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.