பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய கனவு, இலக்கு என்றால் அது 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனலாம்.
ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு இந்த இலக்கானது தவிடு பொடியாகிவிட்டது . முதல் மற்றும் இரண்டாம் அலையினால் சீர்குலைந்த பொருளாதாரம் என்பது தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஓமிக்ரானின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் கனவு இலக்கானது, வெறும் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தினை 2025ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவோம் என மத்திய அரசு இலக்காக நிர்ணயம் செய்திருந்தது.
இந்திய சேவை துறை: 5 மாதம் தொடர் வளர்ச்சி.. ஆனா ஒரு பிரச்சனை..!

8% வளர்ச்சி வேண்டும்
ஆனால் தற்போதைய காலக்கட்டங்களில் அந்த இலக்கினை அடைவது என்பது மிக சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜ்னிஷ் குமார் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அரசின் இந்த மாபெரும் இலக்கினை அடைய இந்தியா 8% வளர்ச்சியினை காண வேண்டும் என கூறியுள்ளார்.

பெரும் முதலீடுகள் தேவை
வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட பொருளாதாரம் தற்போது மீள்ச்சி கண்டு வரும் நிலையில், 5- 6% வளர்ச்சியினால் நாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. 8% வளர்ச்சி அல்லது அதற்கு மேலாக இருந்தால் தான் இலக்கினை எட்ட முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய முதலீடுகள் தேவை. குறைந்த வரிகள் இன்னும் உபரிகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கார்ப்பரேட் வளர்ச்சிக்கு உதவும். இது வணிகத்தினை மேம்படுத்த உதவும்.

தனியார் முதலீடுகள் அவசியம்
குறிப்பாக உற்பத்தி துறை, விவசாயம் ,உள்கட்டமைப்பு துறைகளில் தனியார் முதலீடுகள் பெரியளவில் தேவை. இதற்காக நாம் அரசினையும் முழுக்க சார்ந்திருக்க முடியாது.
மேலும் நாட்டில் தற்போது கார்ப்பரேட் வரிகள் நியாயமானதாக மாற்றப்பட்டுள்ளன. அதனை பற்றி புகார் செய்யக்கூடாது. அரசு பல்வேறு சீர்திருந்தங்களை செய்த போதிலும் முதலீடுகள் போதியளவு அதிகரிக்கவில்லை. ஜிடிபி வளர்ச்சியானது மேம்படவில்லை.

சவால்கள்
இந்தியாவினை பொறுத்தவரையில் புதியதாக வணிகம் தொடங்குவதில் உள்ள சவால்கள் குறைந்திருந்தாலும், இன்னும் மாவட்ட லெவலில் சவால்கள் உள்ளன. ஆக அவைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
இதற்கிடையில் தற்போது ஒமிக்ரான் அச்சமும் கூட்டாக சேர்ந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு வளர்ச்சிக்கு எதிராக அமையலாம். எப்படியிருப்பினும் அரசின் 5 டிரில்லியன் இலக்கினை அடைவதில் மிகப்பெரிய சவால்கள் இருந்து வருகின்றன.