2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பில் இருந்து இந்தியா இன்னும் முழுமையாக மீள முடியாத நிலையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
2020ல் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவில் ஒருபக்கம் மத்திய அரசின் வரி வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது, இதேவேளையில் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அதிகளவில் செலவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

பல கேள்விகள்
இந்த நேரத்தில் புதிதாக வரி விதிக்கப்படும் என்றும், வருமான வரி உயர்த்தப்படும் என்றும், அதிக வருமானம் பெறுபவர்கள் மீது மட்டும் கூடுதலான வரி வசூலிக்கப்படும் என்றும் எனப் பல செய்திகள் வெளியாகி வருகிறது.
ஆனால் உண்மையில் இதை மத்திய அரசால் செய்ய முடியுமா.? புதிய வரி விதிப்பால் என்ன பிரச்சனைகள் வரும்..? இதைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்

வருமான வரி வரலாறு
இந்தியாவில் 1971ல் தனிநபர் வரி பிரிவின் கீழ் 12 வரிப் பலகை அடிப்படையில் 0 முதல் 85 சதவீதம் வரையில் வருமான வரி விதிக்கப்பட்டு இருந்தது. இதில் கூடுதல் வரி உடன் அதிகப்படியாக 93.5 சதவீதம் என்ற உச்ச தனிநபர் வருமான வரி விதிப்பு முறை இருந்தது முக்கியமான வரலாறு.

ப.சிதம்பரம் அதிரடி
இதன் பின் வருமான வரிப் படிப்படியாகக் குறைந்து 1992-93ல் அதிகப்படியாக 40 சதவீதமும், 1997-98 பட்ஜெட்-ல் ப.சிதம்பரம் தலைமையிலான நிதியமைச்சகம் தனிநபர் வருமான வரியை 30 சதவீதமாகக் குறைத்தது, இதேவேளையில் கார்பரேட் வருமான வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

ட்ரீம் பட்ஜெட்
சிதம்பரம் அவர்களின் இந்த ட்ரீம் பட்ஜெட் தான் இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இன்று அதிகப்படியாக 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டாலும், Surcharge எனப்படும் கூடுதல் வரி விதிப்பின் மூலம் அதிகப்படியாக 42.7 சதவீதம் வரையில் வரி வசூல் செய்யப்படுகிறது.

இந்தியாவில் தான் அதிக வரி
இந்நிலையில் உலகின் சக வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் அதிகளவில் வருமான வரி விதிக்கப்படுகிறது. அதிகப்படியாகப் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 35 சதவீதமும், இந்தோனேஷியா 30%, பிரேசில் 27.5%, இலங்கையில் 24% என வருமான வரி விதிக்கப்படும் நிலையில் இந்தியாவில் 42.7 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

வருமான வரித் துறை
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையிலும் புதிய வரி விதிப்பது என்பது வருமான வரி செலுத்துவோரை வருத்தத்தில் ஆழ்த்தும் ஒரு விஷயமாக இருக்கும்.
சமீபத்தில் வருமான வரித் துறை சரியாக வருமான வரி செலுத்துவோரைப் பாராட்டும் முயற்சியாகப் பேஸ்புக் பேட்ஜ் வெளியிட்டது.

புதிய வருமான வரி இருக்காது
மேலும் இந்தியாவில் ஏற்கனவே சக வளரும் நாடுகளை விடவும் அதிக வருமான வரி விதிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் நிலையில் புதிய செஸ் வரி அல்லது வருமான வரி உயர்வு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கத் திட்டமிட்டு வரும் இந்தியா தனிநபர் வருமான வரியும், கார்ப்பரேட் வருமான வரியை விதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பதில் பிப்ரவரி 1ஆம் தேதி தெரியும்.