உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பும் மோசமான நிலையில் இருக்கும் நாடுகளில் இந்திய பொருளாதாரம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்றும், கொரோனா பாதிப்பு முன்பு இருந்த அளவை விடவும் ஜிடிபி அளவு சுமார் 12 சதவீதம் வரையில் குறைவாக இருக்கும் என ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் கணிப்புகள் கூறுகிறது.
கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரம் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது அனைவருக்கும் தெரியும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வந்துவிட்டால் நாட்டும் வர்த்தகமும் இயல்பான நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆக்ஸ்போர்டு பொருளாதாரக் கணிப்புகள் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஆக்ஸ்போர்டு பொருளாதாரக் கணிப்பின் படி கொரோனா பாதிப்புகள் தீர்ந்தாலும் அடுத்த 5 வருடம் அதாவது 2025 வரையில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்திய பொருளாதாரத்தை விடாமல் துரத்தும் எனத் தெரிவிக்கிறது.

இந்திய பொருளாதாரம்
இந்தியாவின் Balance sheet கொரோனாவுக்கு முன்பே அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில், கொரோனா இதை மேலும் மோசமாக்கியுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்தது இந்தியா.

பொருளாதார வளர்ச்சியில் சரிவு
இந்நிலையில் கொரோனாவுக்கு முன்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்த நிலையில் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வெறும் 4.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் ப்ரியாங்கா கிஷோர் இவர் ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ்-ன் தென் ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய பகுதியின் தலைவர் ஆவார்.

முக்கியப் பாதிப்புகள்
இந்தி பொருளாதாரத்தைப் பல வருடமாகப் பாதித்து வந்த கார்பரேட் நிறுவனங்களின் மோசமான நிதிநிலை, தொடர் வளர்ச்சி கண்டு வரும் வராக்கடன் அளவு, NBFC அமைப்புகளின் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு சந்தையின் மோசமான நிலை ஆகியவை கொரோனா பாதிப்புக்குப் பின் பொருளாதாரத்தைக் கடுமையான சரிவுக்குக் கொண்டு சென்றுள்ளது.

நீண்ட கால வளர்ச்சி
இவை அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் நாட்டின் அன்னிய முதலீடு, வர்த்தக வளர்ச்சி நேரடியாகப் பாதிக்கும். இதன் எதிரொலியாகவே அடுத்த 5 வருடத்திற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையை விடவும் மோசமாக இருக்கும்.

5 டிரில்லியன் டாலர்
இந்தப் பாதிப்புகளால் பிரதமர் மோடியின் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் ஜடிபி இலக்கில் இதுவரை எவ்விதமான மாற்றத்தை அறிவிக்கவில்லை.
தற்போது இந்தியாவின் பொருளாதாரம் 2.8 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி
கொரோனா பாதிப்பில் இருந்து வெளியேறவும் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அனைத்து விதமான ஊக்குவிப்பு திட்டங்களையும் அறிவித்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் நாட்டில் பணபுழக்கத்தை அதிகரிக்க முடிந்த அளவிலான உதவிகளைச் செய்துள்ளதை மறுக்கமுடியாது.

ரெசிஷன்
ஆனாலும் இந்திய பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி அடையும் என்றும், இதனால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரெசிஷனுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் காலாண்டு பொருளாதாரத் தரவுகளும், ரெசிஷன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நவம்பர் 27ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எப் கணிப்பு
மார்ச் 2021 முடிவில் இந்திய பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -10.3 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடையும் எனக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது சர்வதேச நாணய நிதியம்.
இந்தியாவில் ஆறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.