உலகமே இந்தியாவை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இந்தியா என்கிற பிரம்மாண்ட நாட்டின் பொருளாதாரம் பல நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் வலிமை கொண்டதாக மாறியிருக்கிறது மாறிக் கொண்டு இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் வர்த்தகம், தொழில் போன்ற பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. உதாரணமாக சமீபத்தில் கையெழுத்து போட மறுத்த ஆர் சி இ பி ஒப்பந்தம்.
பொருளாதாரம் சார்ந்த அறிவிப்புகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் அரசு வெளியிடும் ஜிடிபி, முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், பிஎஃப் மற்றும் இ எஸ் ஐ பதிவு செய்து கொண்டார்கள் போன்ற தரவுகளும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
ஊழியர்களுக்கு நன்றி சொல்லும் ஹூவாய்.. நன்றியுடன் ரூ.2,050 கோடி போனஸ்..!

ஜிடிபி
மேலே சொன்ன தரவுகள் பட்டியலில், ஜிடிபி தரவுகளுக்கு என்று ஒரு தனி முக்கியத்துவம் உண்டு. இப்போது இந்த 2019 - 20 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஜிடிபி 4.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும் என கணித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது எஸ்பிஐ.

நிதி ஆண்டுக்கு
அதோடு 2019 - 20 நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கலாம் எனவும் கணித்திருக்கிறது. எஸ்பிஐ தன்னுடைய முந்தைய கணிப்பில் 2019 - 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 1.1 சதவிகிதம் ஜிடிபி கணிப்பை குறைத்து இருக்கிறது.

இவர்களுக்குப் பின் தான்
இந்தியாவின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியாவின் ஜிடிபி கணிப்பை குறைத்து கொண்டதற்கு முன்பே ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, ஓ இ சி டி, மத்திய ரிசர்வ் வங்கி, சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF), என பல சர்வதேச அமைப்புகள் மற்றும் வங்கிகள் இந்தியாவின் ஜிடிபி கணிப்பை குறைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ
இந்தியப் பொருளாதாரத்தின் நகமும் சதையுமாக பின்னிப் பிணைந்து இருக்கும் ஒரு அரசு வங்கியான எஸ்பிஐ இப்படி, இந்திய ஜிடிபி வளர்ச்சியைக் குறைத்து இருப்பது பலரையும் கொஞ்சம் கலக்கமடையச் செய்து இருக்கிறது. இதற்கு முன்பு இந்தியாவின் பண்டிகை காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்றும் எஸ்பிஐ சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணங்கள்
2019 - 20 நிதியாண்டில் இரண்டாவது காலண்டு மற்றும் 2019 - 20 முழு நிதி ஆண்டாகட்டும் இரண்டுக்குமே ஜிடிபி வளர்ச்சி கணிப்பை குறைத்து இருக்கிறது எஸ்பிஐ. இப்படி தன்னுடைய ஜிடிபி வளர்ச்சி கணிப்பை குறைத்து கொண்டதற்கு பல முக்கிய காரணங்களை பட்டியலிடுகிறது. இந்த காரணங்களை நம்மால் மறுக்க முடியவில்லை என்பதை நீங்கள் படித்தாலே புரிந்து கொள்வீர்கள். அப்படி என்ன காரணங்களை சொல்லி இருக்கிறார்கள்..?வாருங்கள் பார்ப்போம்.

காரணங்கள்
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து சரிந்து வரும் ஆட்டோமொபைல் விற்பனை சரிவு, விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவு, இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சரிவு, இந்திய தொழில் துறையின் வளர்ச்சியின் எல்லாமே சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்தியப் பொருளாதாரம் மட்டும் எப்படி வளர்ச்சி காணும்? மிகக் குறிப்பாக இன்ஃப்ராஸ்ரக்சர் மற்றும் கட்டுமானத்துறையில் தொடர்ந்து முதலீடுகள் சரிந்து வருவதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

எஸ்பிஐ இண்டிகேட்டர்கள்
எஸ்பிஐ, இந்தியாவின் ஜிடிபியைக் கணிக்க, 33 பொருளாதார காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டார்களாம். இந்த 33 காரணிகளில் 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கு 27 சதவிகித காரணிகள் மட்டுமே பாசிட்டிவாக இருக்கிறதாம். இதையே செப்டம்பர் 2019 மாதத்திற்கு கணக்கிட்டுப் பார்த்தால் 17 சதவிகித காரணிகள் மட்டுமே பாசிட்டிவாக இருக்கிறதாம்.

பேய் மழை
இந்த பொருளாதார காரணிகள் போக, கடந்த சில மாதங்களில், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பெய்த கோர மழையையும் காரணமாகச் சொல்கிறார்கள். இந்த கோர மழையால் டன் கணக்கில் விவசாய பயிர்கள் நாசமானதை சுட்டிக் காட்டுகிறார்கள் எஸ்பிஐ தரப்பினர்கள். விவசாயம் சரிந்தால் ஏழைகள் கையில் எங்கிருந்து பணம் வரும்..?

உதாரணம்
இந்தியாவில் எண்ணெய் வித்துக்களை அதிகம் விளைவிக்கும் மத்தியபிரதேசத்தில் கனமழை பெய்ததால் சுமார் 40 முதல் 50 சதவிகித சோயா பீன் பயிர்கள் நாசமாகி இருக்கின்றன. அதோடு சுமார் 40 சதவிகித கடலை பயிர்களும் சேதமாகி இருக்கின்றன. குஜராத்தில் சுமார் 30 சதவிகித பருத்தி பயிர்கள் நாசமாகி இருக்கின்றன. இப்படி விவசாயிகள் வயிற்றில் அடித்த பொருளாதாரக் காரணி மழை.

உலகப் பொருளாதாரம்
இப்படி உள்நாட்டு பொருளாதார காரணிகள் மற்றும் மழை போன்றவைகளே இந்திய பொருளாதாரத்திற்கு போதுமான சிக்கல்களை ஏற்படுத்தி விட்டன. இதை எல்லாம் ஒரு வழியில் சரி செய்து வந்தால், உலகப் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையிலேயே தான் இருக்கிறது. உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 22 முதல் 716 அடிப்படை புள்ளிகள் வரை இறக்கம் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தியா மட்டும் பாதிக்கப்படாமல் இருக்குமா என்ன..?

ஆறுதல்
எஸ்பிஐ யின் இந்த கணிப்பில் ஒரே ஆறுதலான விஷயம் என்ன தெரியுமா..? இந்த பொருளாதார மந்த நிலை பொருளாதார சுழற்சியால் வருவது தான். கூடிய விரைவில் பொருளாதார சுழற்சி மாறி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது எஸ்பிஐ. அரசும் அதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கிறது என நம்புவோம். பொருளாதாரம் வளரட்டும் வேலைகள் கிடைக்கட்டும்.