இந்தியப் பொருளாதாரத்தைச் சேவைத் துறை மற்றும் MSME சார்ந்து இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக உற்பத்தியையும், ஏற்றுமதியையும் முதன்மைப்படுத்திப் பல திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
மத்திய அரசின் இத்திட்டங்கள் மூலம் அடுத்த 10 முதல் 15 வருடத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உற்பத்தி இன்ஜின் ஆக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் உற்பத்தியாளர்களைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்களின் புதிய திட்டம்.. விப்ரோ-வை தொடர்ந்து Mphasis..!

இந்திய உற்பத்தியாளர்
இந்திய உற்பத்தியாளர்களின் வர்த்தகமும், ஆதிக்கமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு விலை பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களையும், அவர்களின் வர்த்தகத்தையும் காக்கும் பொருட்டுச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களின் மீது anti-dumping வரி விதிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் 5 பொருட்கள்
மத்திய அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், சாயத் தொழிலில் பயன்படுத்தும் சோடியம் ஹைட்ரோசல்பைட், சோலார் போட்டோவோல்டாயிக் மாடியூல் மற்றும் தெர்மல் பவர் கருவிகளில் பயன்படுத்தப்படும் சிலிகான் சீலியன்ட், ஹைட்ரோஃப்ளூரோகார்பன் (HFC) கூறு R-32; மற்றும் ஹைட்ரோபுளோரோகார்பன் கலவைகள் ஆகிய 5 பொருட்களின் மீது 5 வருடத்திற்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது.

வர்த்தக அமைச்சகம்
தற்போது குறிப்பிட்டுள்ள 5 பொருட்களும் இந்திய சந்தை விலையை விடவும் மிகவும் குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் வர்த்தகத் தீர்வுகளுக்கான பொது இயக்குநரகம் (DGTR) அமைப்பின் பரிந்துரைப்படி வர்த்தக அமைச்சகம் இந்த வரியை விதித்துள்ளது.

அரபு நாடுகள்
சமீபத்தில் மத்திய அரசு ஈரான், ஓமன், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளில் இருந்து குறைவான விலைக்கு இறக்குமதி செய்யப்படும் கால்சினேடெட் ஜிப்சம் பவுடர்-க்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டு இறக்குமதி அளவு குறைக்கப்பட்டது.