நாளுக்கு நாள் ரஷ்யா - உக்ரைன் போர் மிகப்பெரியதாக வெடித்து வரும் நிலையில் உலக நாடுகள் அடுத்தடுத்துத் தடை விதித்து வருகிறது. இதனால் ரஷ்யா ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் தொடர்பு இல்லாமல் இயங்க வேண்டிய நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் - ரஷ்யா தற்போது பெலாரஸ் நாட்டின் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது, இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு தான் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

இந்திய ஐடி நிறுவனங்கள்
அதேவேளையில் இந்தப் பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை எனில் ரஷ்யா - உக்ரைன் நாட்டுக்கு மத்தியில் மிகப்பெரிய போர் உருவாகும் நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்திய ஐடி துறை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் wait-and-watch நிலைக்குச் சென்றுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்திய ஐடி நிறுவனங்களுக்குப் புதிய பிரச்சனை உருவாகியுள்ளதால், ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் தனது வர்த்தகம் குறித்த முடிவை காத்திருந்து எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக உக்ரைன் நாட்டில் எல்லைப் பகுதியில் பல நாடுகளில் வர்த்தகத்தையும் ஊழியர்களையும் இந்திய ஐடி நிறுவனங்கள் வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள்
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் பெரிய அளவிலான வர்த்தகம் இல்லை என்றாலும் ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் மிகப்பெரிய டெக்னாலஜி சென்டர்களை வைத்துள்ளது.

BCP திட்டம் அறிமுகம்
இப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்திய ஐடி நிர்வாகங்கள் ஏற்கனவே பிஸ்னஸ் கண்டிநியூட்டி பிளான்-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதனால் வர்த்தகத்தில் எவ்விதமான பாதிப்பு இருக்காது, ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் பெரியதாக வெடித்தால் கட்டாயம் பாதிப்பு இருக்கும்.

ஆய்வு
இதனால் ஹங்கேரி, ருமேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்யும் இந்திய ஐடி நிறுவனங்கள் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் நிலையை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளது.

டெக் ஊழியர்கள்
இதேபோல் ISG அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி உக்ரைன் நாட்டில் மட்டும் 50,000 டெக் ஊழியர்கள், 2,00,000 ப்ரீலான்சர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது போர் காரணமாக முடங்கியுள்ளனர்.

2.5 லட்சம் டெக் ஊழியர்கள்
சுமார் 2.5 லட்சம் டெக் ஊழியர்கள் வேலை செய்ய முடியாமல் இருக்கும் காரணத்தால் உலகளவில் இருக்கும் டெக் நிறுவனங்கள் தற்போது பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவின் ஹெச்சிஎல் நிறுவனம் இப்பகுதி வர்த்தகத்தைத் தக்கவைக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.

சைபர் அட்டாக்
இதேபோல் கடந்த 48 மணிநேரத்தில் உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள் மீதான சைபர் அட்டாக் அதிகரித்துள்ள நிலையில், ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தனது பாதுகாப்புத் தளத்தை மேம்படுத்தி வருகிறது.