இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, லாக்டவுன் அறிவிப்புகளுக்கும் பெருமளவு தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகவே தொடர் வளர்ச்சி பாதையில் இருந்து வருகிறது. இதன் வாயிலாக அன்னிய முதலீட்டாளர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து தற்போது அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் சுமார் 18,490 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
2020ல் அன்னிய முதலீடு வேற லெவல்.. 2019 விட 3 மடங்கு அதிகம்..!

அன்னிய முதலீட்டாளர்கள்
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்நாட்டில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் வெளியே அதிகளவில் வளர்ச்சி அடையும் நாடுகளைத் தேர்வு செய்து இந்திய சந்தையில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர்.

ஜனவரியில் அசத்தல்
இந்திய நிறுவனங்கள் மிகவும் லாபகரமான டிசம்பர் காலாண்டு முடிவுகளை அறிவித்து வரும் நிலையில் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் சுமார் 18,490 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்து அசத்தியுள்ளனர். ஆனால் இதேவேளையில் கடன் சந்தையில் இருந்து 3,624 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதன் வாயிலாக ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் மூலம் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு 14,866 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் தென் கொரியா
கொரோனா பாதிப்புகளுக்கு பின்பு சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைய வாய்ப்புகள் நிறைந்த சந்தைகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் இந்தியா மட்டும் அல்லாமல் தென் கொரியாவும்
முதலீட்டாளர்களுக்கு முக்கிய இலக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காலாண்டு முடிவுகளும், கொரோனாவும்
இந்தியாவில் தொடர்ந்து முதலீடு குவிய முக்கியக் காரணம் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் மிகவும் லாபகரமான காலாண்டு முடிவுகளும், தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்தும் போட்டப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் முதலீட்டாளர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கச் சந்தை எதிரொலி
மேலும் அமெரிக்காவில் அமலாக்கம் செய்யப்பட உள்ள 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்க திட்டம் மற்றும் புதிதாக அமைய உள்ள ஜோ பிடன் ஆட்சி ஆகியவை சர்வதேச முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. ஜோ பிடன் ஆட்சி இந்தியாவிற்கு மிகவும் சாதகமாக அமையும் என எதிர்ப்பும் அதீத அன்னிய முதலீடுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.