டெல்லி: இந்திய சந்தைகள் கடந்த வாரத்தில் பலமான சரிவினை சந்தித்த நிலையில், இந்த வாரத்தில் என்னவாகுமோ என்ற பயமும், பதற்றமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் நிஃப்டி 500 புள்ளிகள் சரிவினைக் கண்டது. இந்த நிலையில் இந்த சரிவு இன்னும் சில வர்த்தக அமர்வுகளுக்கு தொடரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தைக்கு மத்தியில் பணவீக்கம் பற்றிய அச்சம் எழுந்துள்ளது.

சந்தையில் ஒரு திருத்தம்
இதற்கிடையில் நிஃப்டி 14,300 வரை சரியலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு ஒரு திருத்தம் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
உலகளாவிய ஈக்விட்டி பங்கு சந்தையை விட, பத்திர சந்தை பெரியது. இது அதிக பணவீக்கத்தின் கீழாக உள்ளது. அமெரிக்க மத்திய வங்கியானது இப்போதைக்கு வட்டியில் மாற்றம் இல்லை என்ற போதிலும் கூட, பங்கு சந்தை முதலீட்டாளர்கள் இந்த கவலையை எழுப்பியுள்ளனர்.

வட்டி விகிதம் அதிகரித்தால்?
ஏனெனில் மத்திய வங்கிகள் வட்டியை அதிகரித்தால், இது கடன்களுக்கான வட்டியை அதிகரிக்க வழிவகுக்கும். இது நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைக்கும். பணப்புழக்கத்தினை குறைக்கும். இதனால் நிறுவனங்களின் பங்கு விலையானது குறையும். ஆக இது சந்தையை எதிர்மறையான தாக்கத்திற்கு உட்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போருக்கு பிந்தைய நிகழ்வா?
சமீபத்திய சந்தை நகர்வானது, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் காணப்பட்ட நகர்வினைக் போல் காணப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் அப்போது அதிக செலவு செய்தது. மீண்டும் சந்தை ஏற்றம் காண்பதற்கு முன், சந்தை சில திருத்தங்களைக் கண்டது. ஆக அதே போன்று தற்போதும் இருக்குமோ என்ற கேள்விக்குறியும் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருத்தம் இருக்கலாம்
இந்தியாவினை பொறுத்த வரையில் பங்குகள் இரட்டிப்பாகிவிட்டன. ஆக சந்தையில் ஒரு திருத்தம் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே சந்தை ஒரு திருத்தம் கண்டுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் என்ன நடக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது. ஆனால் சமீபத்திய சந்தை மிக கூர்மையான ஏற்றத்தினை கண்ட நிலையில், அதே அளவு சரிவினையும் காணலாம்.

நிச்சயம் சரிவு இருக்கும்
கடந்த முறை நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் திருத்தம் கண்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும், ஒரே நாளில் 500 புள்ளிகள் சரிவினைக் கண்டது. ஆக இதுபோன்ற அதிக ஏற்ற இறக்கங்கள் வரும் வாரத்திலும் இருக்கலாம். எனினும் குறிப்பாக 8 - 10% சரிவு இருக்கலாம் என்பதை வர்த்தகர்கள் மனதில் வைத்துக் கொண்டு வர்த்தகம் செய்ய வேண்டும்.