கொரோனா இந்திய மக்கள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது குறிப்பாகச் சமுக இடைவெளி, Work from Home, ஆன்லைன் வகுப்பு, தொற்றுக் காரணமாக அனைவரும் மாஸ்க் அணிவது என அடுக்கிக்கொண்டே போகலாம். இதே காலகட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளி மாநிலங்களில் கூலி வேலைக்காக சென்ற பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து, வறுமைக்குத் தள்ளப்பட்ட காரணத்தால் சொந்த ஊருக்கேச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுமட்டும் அல்லாமல் வர்த்தக பாதிப்பால் மாதம் சம்பளம் பெற்று நிலையான வேலையில் இருந்த பல கோடி மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் மோசமான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இந்த மோசமாகக் கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்களது குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவில் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் மக்களின கடன் வாங்கும் பழக்கத்தில் பெரிய மாற்றம் அடைந்துள்ளது என்பதே தற்போது வியந்து பார்க்க வேண்டிய முக்கிய விஷயமாக உள்ளது.

வங்கி கடன்
இந்தியாவில் 2016 முதல் வங்கியில் கடன் வாங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை தொடர் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பொருளாதாரமும், வர்த்தகமும் அதிகளவில் பாதிப்பு அடைந்த இந்தச் சூழ்நிலையில் கடன் வாங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது.
குறிப்பாக வங்கி சேவைகள் சிறப்பாக இருக்கும் நகரங்களில் வங்கியில் கடன் வாங்கிய குடும்பங்களின் எண்ணிக்கை மே-ஆகஸ்ட் 2020 காலகட்டத்தில் 45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதன் மூலம் வங்கிகளை மக்கள் பெரிய அளவில் புறக்கணித்துள்ளது தெளிவாக விளங்குகிறது.

குடும்பம் மற்றும் நண்பர்கள்
இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவில் தங்களது குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து அதிகளவிலான கடனை பெற்றுள்ளனர். இதனால் மக்கள் வங்கிகளை நம்பியிருக்கும் நிலை பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்திய கிராமங்களில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து கடன் பெற்றவர்களின் அளவு 2019 வெறும் 14 சதவீதமாக இருந்த நிலையில், 2020 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நகரபுறத்தில் 13 சதவீதத்தில் இருந்து 27 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

கடைகள்
இதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவில் கடன் பெற்றது கடைகளில் தான், குறிப்பாக மளிகைக் கடைகள் இந்திய மக்களுக்கு அதிகளவிலான கடனுக்குப் பொருட்களைக் கொடுத்துப் பல கோடி குடும்பங்களைக் காப்பாற்றியுள்ளது.

நம்ம ஊரு அண்ணாச்சி கடை
கடந்த வருடம் சுமார் 52 சதவீதம் மக்கள் கடைகளில் கடனை பெற்றுக் குடும்பத்தை நடத்தி இருந்த நிலையில், இந்த வருடம் 57.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. வங்கிகளை விடவும் மக்களுக்கு அதிகக் கடன் கொடுத்தது நம்ம ஊரு ஆண்ணாச்சி கடைகள் தான்.

செலவு
இதேபோல் இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் அதிகளவில் செலவு செய்வதையும், தேவையற்ற பொருட்களை வாங்குவதையும் குறைத்துள்ளனர். இதனால் நுகர்வோர் சந்தையில் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது.
ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. இதற்கு ஆன்லைன் கல்வி, Work From Home போன்றவை காரணங்களாக உள்ளது.

முதலீடு
ஆனால் இதே காலக்கட்டத்தில் மக்கள் அதிகளவில் சொத்து சேர்க்கும் விஷயத்தில் முதலீடு செய்துள்ளனர். வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீடு மறுசீரமைப்புச் செய்வது, நிலம் வாங்குவது, பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது, பிற திட்டங்களில் முதலீடு செய்வது எனப் பல வகையில் சொத்து சேர்க்கும் பணியில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டு உள்ளனர்.

தங்கம்
இதே காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்கள் தங்களது நிதி சேவைக்காக வீட்டில் இருந்த தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்தும், அடகு வைத்தும் நிதியைத் திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி மூலம் கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கையில் இந்தத் தங்க கடனும் அடங்கும்.