இந்தியாவில் ஒரு புறம் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அரசு பலவேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கொரோனாவிற்கு முன்பே, பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான நடவடிக்கையில் அரசும் ஈடுபட்டு வந்த நிலையில் தான், கொரோனா வந்து குறுகிட்டது.
எனினும் தற்போது மீண்டும் தற்போது தனியார்மயம் என்னும் ஆயுதத்தினை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

ரயில்வே அமைச்சம் அழைப்பு
தற்போது 109 வழித்தடங்களில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையில், தகுதிவாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்காக ரயில்வே அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கையின் படி, 109 ரயில்வே வழித்தடங்களில் 151 நவீன பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

முதல் முயற்சி
இந்த தனியார் ரயில்களுக்கான 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று ரயில்வே துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்தான அறிக்கையில், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான தனியார் முதலீட்டின் முதல் முயற்சி இதுவேயாகும் என்றும் தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி-க்கு கடந்த ஆண்டு அனுமதி
கடந்த ஆண்டில் ஐஆர்சிடிசி ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்திருந்தது. அதன் படி மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 151 ரயில்கள் இயக்க அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த தனியார் ரயில்களில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்மென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய 109 வழித்தடங்களும் 10 - 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இது தான் இலக்கு
இது குறித்து ரயில்வே தரப்பு, ரயில்வே துறையில் நவீன தொழில் நுட்பத்தினை கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பினை அதிகரிக்க வேண்டும். அதோடு உலகத்தரம் வாய்ந்த பயணத்தினை மக்களுக்கு வழங்கவேண்டும், பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எந்தெந்த ஊர்களுக்கு தனியார் ரயில்?
இந்த வழித்தங்களில் மும்பை - டெல்லி, சென்னை - டெல்லி, டெல்லி - ஹவுரா, ஷாலிமார் முதல் புனே, டெல்லி முதல் பாட்னா வரை தனியார் ரயில்கள் இயக்கப்படும். அதோடு இந்த ரயில்கள் அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும். மேலும் ரயில்வேயில் தனியார் துறையில் வேலை என்பது ரயில் சேவையை அளித்தல், நிதியளித்தல் கொள்முதல் செய்தல், பராமரிப்பு செய்தல் மட்டும் தான் என்றும் கூறியுள்ளது.

இவ்வளவு வேகமா?
மேலும் இவ்வாறு இயக்கப்படும் ஒவ்வொரு ரயில்களும் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையதாக வடிவமைக்கப்படும். இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மேலும் இந்த ரயில்களை இயக்கும் ஒட்டுனர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ரயில்வே துறையினராக மட்டுமே இருப்பர்.

எப்போது இயங்கும்
ஆக இந்த தனியார்மயம் திட்டமானது இரு பகுதிகளாக செயல்படுத்தப்படும். முதலாவதாக தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்களிட,ம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இரண்டாவது அவர்கள் எப்படி வருவாயை பெருக்குவார்கள் என்பது குறித்தும் விசாரிக்கப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட பாதையில் இயங்கும் தனியார் ரயில், அதே பாதையில் இயங்கும் மற்ற ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.