இந்தியாவில் ஒரு தலைமுறையே ஐடி துறையின் பக்கம் ஈர்க்க முக்கியக் காரணமாக இருந்த சில நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. கடந்த 25 வருடத்தில் இந்திய முதலீட்டுச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்தது இன்போசிஸ் நிறுவனம் தான்.
இதேபோல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தனதாக்கிய பெருமை உடைய ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தோனி மட்டுமே. தோனியின் கேப்டன்சியில் இந்தியா உலகக் கோப்பை உட்பட அனைத்து முக்கியமான கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இன்போசிஸ் தோனிக்கும் இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. இன்போசிஸ் உருவானதும் ஜூலை 7, 1981 தல தோனி பிறந்ததும் ஜூலை 7, 1981. இந்த விஷயத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்திச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
பெங்களூரில் சிறிய இடத்தில் நண்பர்கள் சில இணைந்து உருவாக்கிய ஒரு குட்டி நிறுவனமான இன்போசிஸ், இன்று நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு 2,39,000 ஊழியர்களைக் கொண்டு மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் 1981ல் வெறும் 250 டாலர் கொண்டு துவங்கப்பட்ட நிலையில் இன்று 41.44 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டு உடன் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஒரு சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது.
இன்போசிஸ்-ன் இந்த 39 வருடப் பயணத்தில் பல தடைகளைத் தாண்டி நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் NASDAQ-வில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய ஐடி நிறுவனமாகவும் இன்போசிஸ் பெயர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தோனியும் எவ்விதமான கிரிக்கெட் பின்புலமும் இல்லாமல் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு மாபெரும் வெற்றியையும், ஒரு வரலாற்றையும் படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் உலகளாவிய கிரிக்கெட் உலகில் தோனிக்கு நிகர் தோனி மட்டுமே.