இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் இன்போசிஸ் பங்குகள் இன்று காலை வர்த்தகத்தில் வரலாற்று உச்ச அளவீட்டை எட்டியுள்ளது.
ஒருபக்கம் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் இருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில் தொடர்ந்து வர்த்தகமும் வருமானமும் அதிகரித்து வருகிறது. மறுபக்கம் ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில் சர்வதேச நிறுவனங்கள் டிஜிட்டல் நிர்வாகத்திற்கும் வர்த்தகத்திற்கும் அதிகளவில் முதலீடு செய்யத் தயாராகியுள்ளனர்.
இதனால் இன்போசிஸ் உட்பட அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல்-ன் முக்கிய முடிவு.. ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி..!

செல்லப்பிள்ளை இன்போசிஸ்
இந்நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையான இன்போசிஸ் பங்குகள் மீது கடந்த ஒருமாதமாக அதிகப்படியான முதலீடுகள் குவிந்த நிலையில் இன்று இன்போசிஸ் பங்குகள் வரலாற்று உச்ச அளவான 1860 புள்ளிகளை எட்டி முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

இன்போசிஸ் பங்குகள்
இன்போசிஸ் பங்குகள் அக்டோபர் 20, 2021 தேதியன்று 1,848.25 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு இருந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் 2 சதவீதம் உயர்ந்து 1860 ரூபாய் என்ற வரலற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்போசிஸ் பங்குகள் 3வது நாளாகத் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு மாதத்தில் 2 சதவீதம் வரையில் சரிவடைந்த நிலையில் இன்போசிஸ் பங்குகள் இக்காலகட்டத்தில் சுமார் 7 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்துள்ளது.

ரீடைல் முதலீட்டாளர்கள்
இதேபோல் கடந்த 3 மாத அளவீட்டில் சென்செக்ஸ் 4.2 சதவீதம் சரிந்த நிலையில் இன்போசிஸ் 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதைவிட ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய என்ன காரணம் வேண்டும்.

ஒரு வருடத்தில் 48% வளர்ச்சி
இன்போசிஸ் பங்குகள் 6 மாதத்தில் 23 சதவீதமும், ஒரு வருடத்தில் 48 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது, இந்த அதீத வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் தொடர்ந்து கிடைத்து வரும் வெளிநாட்டு வர்த்தகம் தான். மேலும் இன்போசிஸ் கடந்த ஒரு வார வளர்ச்சிக்கு அக்செனசர் வெளியிட்ட காலாண்டு முடிவுகளும் முக்கியக் காரணம்.

அக்சென்சர் நிறுவனம்
சமீபத்தில் சர்வதேச அளவில் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் அக்சென்சர் நிறுவனம் நவம்பர் காலாண்டில் சிறப்பான வருவாய் அளவீட்டைப் பதிவு செய்துள்ள நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்புகளைப் பெரிய அளவில் வெளியிட்டு இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது.

இன்போசிஸ் ஊழியர்கள் எதிர்பார்ப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருமானம் அதிகரிக்க உள்ள நிலையில் இன்போசிஸ் சிஇஓ சம்பளம் தாறுமாறாக உயர்வது போல் ஊழியர்களின் சம்பளமும் உயருமா என்ற எதிர்பார்ப்பு இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இன்போசிஸ் வழக்கம் போல் அதே சராசரி அளவான 6 முதல் 9 சதவீத சம்பளத்தைத் தான் கொடுக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.