ரிசர்வ் வங்கியில் பதிவு செய்த வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்களில் மட்டுமே கடன்பெற வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டாம் என RBI எச்சரித்துள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கூறி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
BPCL தனியார்மயம்.. 2021ம் நிதியாண்டில் முடிய வாய்ப்பில்லை.. என்ன காரணம்..!

இணையம் வழியாக கடன்
இன்றைய காலகட்டத்தில், இணையதளம் மற்றும் மொபைல் ஆப்கள் வழியாகப் பல்வேறு நிறுவனங்கள் பொதுமக்களுக்குக் கடன்கள் வழங்குகின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் கடன் வாங்குபவர், கடன் தருபவரை நேரில் பார்க்காமலே இந்த மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள், கடன் கேட்பவரின் பான் கார்டு எண், ஆதார் எண்ணை வாங்கி அதன் மூலமாகக் கடன் கேட்பவரின் கடந்த கால சிபில் ஸ்கோர்களை கண்காணித்து கடன் வழங்குகின்றன.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
முதலில் குறைந்த தொகையைக் கடனாக கேட்பவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கின்றன. ஆனால் அதனைத் தவணை முறையில் செலுத்திய பின், திருப்பிச் செலுத்தும் முறையை வைத்து அதிக கடன் தொகையை வழங்குகின்றன. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கியோ, ஆப் மூலமாகக் கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

அதிக கட்டணம்
குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாகக் கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன்பெற வேண்டாம். ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுகக் கட்டணம் எனக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. மேலும், கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

புகார் அளிக்கலாம்
அப்படி அதிக வட்டி, மறைமுகக் கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாகக் காவல்துறையில் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் (https://cms.rbi.org.in/cms/IndexPage.aspx?aspxerrorpath=/cms/cms/indexpage.aspx) பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம் என்று கூறியுள்ளது.