இந்திய ஐடி துறையில் இருக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் போன்ற கம்பெனிகள், இந்திய ஐடி துறையின் தூண்கள் எனலாம்.
இப்போது இந்த முக்கிய ஐடி கம்பெனிகளிலேயே, எதிர்பார்த்த அளவுக்கு ப்ராஜெக்ட்கள் வரவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஐடி கம்பெனிகளுக்கு உண்மையாகவே புதிய ப்ராஜெக்ட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கின்றனவா? கம்பெனி தரப்பில் எனன் சொல்கிறார்கள்? ப்ராஜெக்ட் கிடைக்கவில்லை என்றால், கம்பெனிகளுக்கும், ஊழியர்களுக்கும் என்ன பிரச்சனை? வாருங்கள் பார்ப்போம்.

ப்ராஜெக்ட் சிக்கல்
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், இந்தியாவின் முன்னணி ஐடி கம்பெனிகளுக்கே, புதிதாக கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட்கள் கிடைக்கவில்லை அல்லது தாமதமாகிறது என எகனாமிக் டைம்ஸ் வலை தளத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ஏற்கனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

அதிகரிக்கும் பெஞ்ச் ஊழியர்கள்
ஐடி கம்பெனிகளில், ஊழியர்களுக்கு எந்த ப்ராஜெக்டும் ஒதுக்கப்படவில்லை என்றால், அவர்கள் பெஞ்சில் அமர வைக்கப்படுவார்கள். இப்போது டி சி எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் போன்ற முன்னணி ஐடி கம்பெனிகளில், போதுமான ப்ராஜெக்ட்கள் கிடைக்காததால், பெஞ்ச் ஊழியர்களின் எண்னிக்கை அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கம்பெனிகளுக்கு என்ன பாதிப்பு
இப்படி ப்ராஜெக்ட் கைவசம் இல்லாமல், அதிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருப்பதால், கம்பெனியின் மார்ஜின்கள் குறையலாம். ஆனால் ஒரு வருடத்துக்கு முன், இந்திய ஐடி கம்பெனிகளில் நிலைமை இப்படி இல்லை. பெஞ்சில் அமர்ந்த ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்ததாம்.

விப்ரோ கருத்து
இப்போது இருக்கும் சூழலில், வேலைகளை பாதுகாக்க வேண்டியது, எங்கள் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெளிவாகச் சொல்லி இருக்கிறது விப்ரோ. அதே போல, விப்ரோ கம்பெனி, தங்கள் ஊழியர்களை reskill செய்யவும் upskill செய்யவும் கணிசமாக முதலீடு செய்து வருகிறார்களாம். இந்த முதலீடுகளினால், ஊழியர்கள் தற்போது இருக்கும் ஐடி டிரெண்டில் தொடர்போடு இருப்பதையும், ப்ராஜெக்ட்களை கையாள்வதற்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்கிறது என, விப்ரோ நிறுவன பேச்சாளரே சொல்லி இருக்கிறார்.

இன்ஃபோசிஸ் தரப்பு
கம்பெனிகளுக்கு ப்ராஜெக்ட் கிடைக்க கொஞ்சம் தாமதமாகிறது. சில ப்ராஜெட்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. ஊழியர்கள், வேறு ப்ராஜெக்டுக்கு மாற்றப்படும் வரை பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார்கள் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வளத் தலைவர் க்ரிஷ் சங்கர் சொல்லி இருக்கிறார். அதோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில், கடந்த ஜூன் காலாண்டில் utilization rate (பயிற்சி பெறும் ஊழியர்களைச் சேர்க்காமல்) 81.2 சதவிகிதமாக இருக்கிறது. அதற்கு முந்தைய காலாண்டில் 83.5 சதவிகிதமாக இருந்தது என்கிறது இன்ஃபோசிஸ் தரப்பு.

ஹெச் எஃப் எஸ் ரிசர்ச் கணிப்பு
ஐடி கம்பெனிகளுக்குள் நிலவும் கடுமையான போட்டி மற்றும் ஆட்டோமேஷன் போன்ற காரணங்களால், கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க, கொஞ்சம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டி இருக்கும் என்கிறார் ஹெச் எஃப் எஸ் ரிசர்ச் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பில் ஃபெர்ஸ்ட் (Phil Fersht). அதோடு, நாம் இப்போது முதல் கட்ட பணியாளர் குறைப்பைப் பார்க்கிறோம். குறிப்பாக அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு, இந்த பணியாளர் குறைப்பு மேலும் தொடரலாம் எனச் சொல்லி இருக்கிறார் ஃபில்.