இந்தியாவில் கொரொனா பாதிப்பும் மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்த காரணத்தால் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.
கொரோனாவுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேலைவாய்ப்பு சந்தையைப் படுமோசமான நிலைக்குத் தள்ளியது யாராலும் மறுக்க முடியாது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்ட பின்பும் வேலைவாய்ப்புச் சந்தையில் தொடர் வளர்ச்சி என்பது இல்லை.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 3வது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் நாட்டில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என முக்கிய இலக்குடன் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வீடு வாங்குவோருக்கு 'பெரிய' வரி சலுகை.. நிர்மலா சீதாராமன் மாஸ் அறிவிப்பு..!

10,000 கோடி ரூபாய்
இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டும் என முடிவு செய்துள்ள மத்திய அரசு பருவமழை சிறப்பாக இருக்கும் காரணத்தாலும், விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த PM Garib Kalyan Rozgar Yojana திட்டத்தின் கீழ் சுமார் 10000 கோடி ரூபாய் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர்

MGNREGA திட்டம்
இந்திய கிராமங்களில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியை உருவாக்கி வரும் MGNREGA திட்டத்திற்கு 73,504 கோடி ரூபாய் அளவிலான நிதி அளித்துள்ளது.
இதன் மூலம் 251 கோடி பேருக்கான ஒருநாள் வேலைக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளார் நிதியமைச்சர்

116 மாவட்டங்கள்
தற்போது இந்தியா முழுவதும் 116 மாவட்டங்களில் ஊரக மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக PM Garib Kalyan Rozgar Yojana திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இதுநாள் வரையில் சுமார் 57,543 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுப் பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

விவசாயக் கடன்
கிஷான் கிரெடிட் கார்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்குக் கூடுதல் கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார், இதனால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட்
கிராமம் மற்றும் ஊரக வளர்ச்சி மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களைப் பார்த்த நிலையில், நகரப்புற வேலைவாய்ப்புக்காகவும், ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்காகவும் நகரப்புற வளர்ச்சிக்குப் பிரத்தியேகமாக முன்வைத்து PMAY திட்டத்திற்கு 18,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததன் மூவம் இந்தியாவில் சுமார் 12 லட்சம் வீடுகள் புதிதாகக் கட்ட துவங்கவும், 18 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படவும் முடியும்.
இதுமட்டும் அல்லாமல் இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீடு காரணமாகச் சுமார் 78 லட்சம் வேலைவாய்ப்புகள் ரியல் எஸ்டேட் துறையில் உருவாக முடியும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

26 துறைகள்
காமத் கமிட்டி ஆய்வின் படி பாதிப்பு அடைந்த 26 துறைகள் தேர்வு செய்யப்பட்டு அவசரக் கால நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது. அவசரக் கால நிதி திட்டத்தின் கீழ் ஒரு வருடக் கடன் சலுகையும் (moratorium), கடனை திருப்பிச் செலுத்த 4 வருட அவகாசமும் கொடுக்கப்பட்டது. தற்போது அவகாச காலம் 5 வருடமாக உயர்த்தப்படுகிறது என நிதியமைச்சர் தெரிவித்தார்.
கடன் சலுகை கிடைக்கும் காரணத்தால் வர்த்தகத்தை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் நிறுவனங்கள் முயற்சி செய்யும். இதனால் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PLI திட்டம்
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த Production Linked Incentives திட்டத்தின் கீழ் 10 முக்கியமான துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் நன்மை அடைவது மட்டும் அல்லாமல் உற்பத்தித் துறை சிறப்பான வளர்ச்சியை அடையும்.
இதனால் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்படும்.