உலகிலேயே அதிக எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் டிவிட்டரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-ஐ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது..? ஏன் எலான் மஸ்க் அதிபர் ஜோ பைடன் அமெரிக்கர்களை முட்டாள்கள் போல் நடத்துகிறார் என் விமர்சனம் செய்தார்..?

ஜோ பைடன்
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய அந்நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனை செய்துள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு ஜோ பைடன் தனது டிவிட்டரில் ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கிறது எனத் தெரிவித்து இருந்தார்.

டெஸ்லா நிராகரிப்பு
ஜோ பைடன் நிறுவன தலைவர்கள் அழைப்பிலும் டெஸ்லா நிறுவனத்தை நிராகரித்து, டிவிட்டர் பதிவிலும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை, இதில் கடுப்பானார் எலான் மஸ்க்.

பைடன் ஒரு பொம்மை
அதிபர் பைடனின் POTUS டிவிட்டர் கணக்கில் செய்யப்பட்ட பதிவுக்கு எலான் மஸ்க் TESLA என்பதைக் கேப்பிடல் லெட்டரில் கிண்டலாகப் பதிவிட்டார். இதோடு நிற்காத எலான் மஸ்க் அடுத்த டிவீட்டில் பைடன் மனித வடிவில் இருக்கும் ஒரு பொம்மை எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க மக்கள்
பைடன் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம், அதை அமெரிக்காவில் உருவாக்குவதாகப் பைடன் மற்றும் மேரி பாரா உடன் வெளியிட்ட வீடியோவுக்கு எலான் மஸ்க், பைடன் அமெரிக்க மக்களை முட்டாள்கள் போல் நடத்துகிறார் என நேரடியாகி விளாசியுள்ளார்.

எலக்ட்ரிக் கார் உற்பத்தி
உண்மையில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா இதுவரை 9,36,172 கார்களைத் தயாரித்துள்ளது, ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ் 24,828 எலக்ட்ரிக் கார்களையும், போர்டு 27,140 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரித்துள்ளது. ஆனாலும் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை பைடன் குறிப்பிடவில்லை என்பது தான் எலான் மஸ்க்-ன் கோபம்.

டெஸ்லா-வின் சாதனை
எலக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல் கார்களுக்கு இணையாக ஏன் பெர்ரோல் கார்களை விடவும் சிறப்பாக இயக்க முடியும் என நிரூபணம் செய்தது டெஸ்லா தான். எலான் மஸ்க் தலைமையில் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

உலக நாடுகள்
உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தையும், அதன் தொழில்நுட்பத்தையும் கண்டு வியந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபரான ஜோ பைடன் டெஸ்லா பெயரை குறிப்பிடாதது எலான் மஸ்க்-கிற்கு மட்டும் அல்லாமல் பல அமெரிக்க மக்களுக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது.