இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு, வர்த்தகம், வரி வருமானத்தை உருவாக்கும் முக்கியமான மாநிலத்தில் ஒன்றான கர்நாடகா கடந்த சில வருடங்களாகவே ஐடி துறையைத் தாண்டி தொழிற்துறை பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.
கர்நாடக அரசு ஏற்கனவே பல தொழிற்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ள நிலையில், தற்போது புதிதாக 88 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கர்நாடக மாநிலத்தில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கர்நாடக மாநிலம்
கர்நாடக மாநிலத்தில் புதிதாகத் தொழில் துவங்க வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் எளிதான அணுகுமுறையை அளிக்க வேண்டும் என்பதற்காகப் பல மாற்றங்களைக் கர்நாடக மாநில அரசு செய்துள்ளது. இந்நிலையில் 129வது மாநில அளவிலான ஒற்றைச் சாளர அனுமதிக் குழு-வின் (SLSWCC) கூட்டம் இம்மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலை துறை அமைச்சர் ஆர் நிராணி தலைமையில் நடந்தது.

88 தொழிற்துறை திட்டங்கள்
இக்கூட்டத்தில் 2,367.99 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்பு கொண்ட சுமார் 88 தொழிற்துறை திட்டங்களுக்கு ஆர் நிராணி தலைமையிலான SLSWCC குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் கர்நாடக மாநிலத்தில் சுமார் 10,904 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

88 திட்டங்கள்
தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ள 88 திட்டங்களில் 7 திட்டங்கள் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு மதிப்பு கொண்ட திட்டங்களாகும். இந்த 7 திட்டங்களின் முதலீட்டு மதிப்பு மட்டும் 799.1 கோடி ரூபாய், இத்திட்டங்கள் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 3,237 ஆகும்.

முக்கிய நிறுவனங்கள்
மேலும் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள குருதத்தா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா நிறுவனம் 357 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்பான்சுல்ஸ் ஃபார்முலேஷன்ஸ், ரினாக் இந்தியா, சன்விக் ஸ்டீல்ஸ், எச்&வி அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ், ஏ ஒன் டெக்ஸ்டெக், டெக்ஸ்போர்ட் இண்டஸ்ட்ரீஸ், கெய்ன்ஸ் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் கர்நாடகாவில் தொழிற்சாலை அல்லது உற்பத்தி தளத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஏப்ரல் - டிசம்பர் 2021 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 1,43,902 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 304 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதில் டாடா குரூப், JSW ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிவிஎஸ் மோட்டார்ஸ், அதானி குரூப், எல் அண்ட் டி போன்ற பெரு நிறுவனங்களும் அடக்கம்.

குஜராத், தெலுங்கானா
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 36,292 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. மேலும் ஏப்ரல் - டிசம்பர் 2021 காலகட்டத்தில் குஜராத் 77.892 கோடி ரூபாயும், தெலுங்கானா 65,288 கோடி ரூபாய் முதலீட்டை மட்டுமே பெற்றுள்ள நிலையில் இந்தியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.