எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இது கடந்த 2020 - 2021ம் நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பரவல் காரணமாக இந்த பங்கு விற்பனையானது கால தாமதமாகி வருகின்றது.
எல்ஐசி உள்பட 5 - 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையானது, நடப்பு ஆண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கல்
இது குறித்து தொழில் துறை அமைப்பான CII-ன் உலகளாவிய பொருளாதரக் கொள்கை உச்சி மாநாட்டில், கலந்து கொண்ட முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) செயலாளர் துஹின் காந்தா பாண்டே, 19 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் 5 - 6 நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படலாம். இதில் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது. இது தவிர பிபிசிஎல் நிறுவனத்தையும் தனியார் மயமாக்க தீவிர முயற்சி எடுத்து வரப்படுகின்றது.

விற்பனை செய்யப்படலாம்
இந்த தீவிர முயற்சிக்கு மத்தியில் BEML, பவன் ஹான்ஸ், NINL, உள்ளிட்ட நிறுவனங்கள் டிசம்பர் - ஜனவரியில் பங்குகள் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் அரசு 1.75 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இதில் 2021 - 22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட், பவன் ஹான்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என அறிவித்தது நினைவு கூறத்தக்கது.

அரசாங்கத்தின் முயற்சி
இந்த நிலையில் தான் இந்த ஆண்டில் எல் ஐ சி-யின் பொது பங்கு வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நான்காவது காலாண்டில் சந்தைக்கு வரலாம் என பாண்டே கூறினார்.
இதற்கிடையில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் தொற்று நோய்களுக்கு மத்தியில், கடந்த 18 மாதங்களில் பல சீர்திருத்தங்களைக் செய்தது. குறிப்பாக பல செயல்முறைகளை எளிதாக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இந்த நிலையில் தான் இந்த ஆண்டின் இறுதிக்குள் பங்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு நடவடிக்கை எடுக்கும்
நாட்டில் தற்போது சிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், வீடுகளின் விலையும் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் கடன் கொள்கையில் மாற்றம் தேவை. அரசு விரைவில் இதில் மாற்றம் கொண்டு வரலாம் என்று பொருளாதார விவரகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் இந்த மாநாட்டில் கூறியுள்ளார்.