நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனமானஎல்ஐசி (LIC), தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றிலும் முதலீடு செய்து வருகின்றது. அரசுக்கும் அவசர காலகட்டங்களில் ஆபத்பாந்தவனாக இருந்து வருகிறது.
இப்படி ஒரு மாபெரும் நிறுவனம், இரு சக்கர வாகன நிறுவனத்தின் முன்னணி வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பில், தனது பங்கு விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
அதெல்லாம் சரி எல்ஐசி, ஹீரோ மோட்டோகார்ப்பில் எவ்வளவு பங்குகளை வைத்துள்ளது? தற்போது எவ்வளவு வாங்கியுள்ளது. விவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
விழாக்கால விற்பனையில் செம சேல்ஸ்.. 14 லட்சம் வாகனங்கள்.. ஹீரோ மோட்டோகார்ப்புக்கு ஜாக்பாட் தான்..!

பங்கு அதிகரிப்பு
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், எல்ஐசி தற்போது 2 சதவீதத்திற்கும் மேலாக தனது பங்கு விகிதத்தினை அதிகரித்துள்ளது. இது மொத்தம் சேர்த்து ஹீரோ மோட்டோகார்ப்பில் 9.17 சதவீதம் பங்குகளை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது 4,036,938 பங்குகளை, அதாவது 2.021 சதவீதம் பங்குகளை மே 19, 2020 முதல் ஜனவரி 4, 2021 வரையிலான காலகட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஷேர்ஹோல்டிங் பேட்டர்ன்
ஏற்கனவே எல்ஐசியின் வசம் 14,273,295 பங்குகள் அதாவது 7.145 சதவீதம் பங்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. BSE- யின் சமீபத்திய தரவின் படி, அதன் விளம்பரதாரர் மற்றும் விளம்பரதாரர் குழு நிறுவனங்கள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் 34.76 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் பொது பங்குதாரர்கள் செப்டம்பர் 30,2020 நிலரவரப்படி, 65.24 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

எல்ஐசி – ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் பரிமாற்றத்தில் எல்ஐசி நிறுவனம் ஜூன் 21 முதல் மே 19,2020 வரையிலான காலகட்டத்தில் 40,16,255 பங்குகளை வாங்கியதாகவும், இதன் மூலம் இந்த நிறுவனத்தில் எல்ஐசி-யில் அதன் பங்கு 7.146 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் பங்கு விலை
இதற்கிடையில் கடந்த செவ்வாய்கிழமையன்று வர்த்தக முடிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.77% அதிகரித்து 3,067.30 ருபாயாக முடிவடைந்தது. இன்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று அதிகரித்து 3,074 ரூபாயாக காணப்படுகிறது.
எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் கோடக் மகேந்திரா வங்கி உட்பட சில வங்கிகள், நிறுவனங்களில் புதிய முதலீடுகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.