நடப்பு ஆண்டு முடிவடைய ஒரு சில நாட்களே உள்ள நிலையில், நிச்சயம் இந்த ஆண்டினை அவ்வளவு எளிதாக யாரும் மறக்கவும் முடியாது. நினைக்காமல் இருக்கவும் முடியாது.
ஏனெனில் வரலாறு காணாத நாடு தழுவிய முழு லாக்டவுன், இனி இப்படி ஒரு நிலையை, அடுத்து வரும் சந்ததிகள் கூட சந்திக்க கூடாது என்பது தான் இங்கு அனைவரின் பிரார்த்தனையும்.
இப்படி உலகையே கண்ணுக்கு தெரியாத கிருமி ஆட்டிப்படைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தியாவின் சில முன்னணி நிறுவனங்கள் வழக்கம் போலவும், வழக்கத்தினை விட சிறப்பாகவும் செயல்பட்டுள்ளன. ஆக அதனை பற்றித் தான் நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.
இதுவரை உங்க மொபைல் நம்பரை அப்டேட் செய்யவில்லையா.. அப்படின்னா முதல்ல அப்டேட் செய்ங்க..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அந்த வகையில் இன்று நமது பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருப்பது, பில்லியனரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். சொல்லப்போனால் முதல் முறையாக 12.64 டிரில்லியன் ரூபாய் சந்தை மூலதனத்தினை தொட்ட நிறுவனமும் இது தான்.
இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், அண்டை நாடுகளின் முன்னணி நிறுவனங்களுக்கு இணையாக செயல்பட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான்.
அதோடு நடப்பு ஆண்டில் இந்த நிறுவனம் அதன் தொலைத்தொடர்பு வணிகத்திலும், ஆன்லைன் சில்லறை வணிகத்திற்கும் தேவையான பெரும் முதலீடுகளை திரட்டியது. திரட்டிக் கொண்டும் உள்ளது. இன்னும் சில நிறுவனங்களில் முதலீடும் செய்து வருகின்றது.

இரண்டாவது இடத்தில் டிசிஎஸ்
நம் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது, தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனமாகும். இதன் சந்தை மதிப்பு 10.91 டிரில்லியன் ரூபாயாகும்.
கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த நிறுவனத்தின் லாபம் பட்டை கிளப்பிக் கொண்டு வந்தது. இது அதன் துரித செயல்பாடு, புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் என பல காரணங்களாலும், டிஜிட்டல் துறையில் வளர்ச்சி, குறிப்பாக கிளவுட் கம்ப்யூட்டிங் என பலவும் இதன் லாபத்திற்கு வழிவகுத்தன. இதனால் இதன் பங்கு விலையும் அதிகரித்தது.
இதற்கிடையில் இதன் நிகரலாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில், 7,448 கோடி ரூபாயாகும். இதே ஜூன் காலாண்டில் 6,096 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தினை பிடித்த ஹெச்டிஎஃப்சி வங்கி
தனியார் வங்கிகளில் முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மூலதனம் 7.69 டிரில்லியன் ரூபாயாகும்.
கடந்த செப்டம்பர் காலாண்டில் இவ்வங்கியின் நிகரலாபம், 7,513.11 கோடி ரூபாயாகும். இதே ஜூன் காலாண்டில் 6,658.62 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதே மார்ச் காலாண்டில் 6,927.69 கோடி ரூபாயாகவும் இருந்தது.
இவ்வங்கியின் மொத்த வாரக்கடன் விகிதமானது கடந்த செப்டம்பர் காலாண்டில் 11,304.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே ஜூன் காலாண்டில் 13,773.46 கோடி ரூபாயாகவும் இருந்தது. வாரக்கடன் குறைந்துள்ள இதே நேரம் இதன் வட்டி வருவாயும் 23,404.85 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி இதன் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 1.545 அதிகரித்து 1396.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

4வது இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர்
சிறந்த ஐந்து நிறுவனங்களின் பட்டியலில் 4வது இடத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இதன் சந்தை மூலதனம் 5.36 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
கொரோனா காலகட்டத்திலும் ஓரளவுக்கு தங்களது வர்த்தகத்தினை செய்தது நுகர்வோர் பொருட்கள் துறை தான். அந்த வகையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சற்றே தனது வளர்ச்சியினைக் கண்டது.
இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் நிகரலாபம் செப்டம்பர் காலாண்டில் 2009 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஜூன் காலாண்டில் 1,881 கோடி ரூபாயாகவும், இதுவே மார்ச் காலாண்டில் 1519 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப் படி இதன் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 1.21% அதிகரித்து 2,399.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

5வது இடத்தில் இன்ஃபோசிஸ்
டாப் 5 நிறுவனங்களில் ஐந்தாவது இடத்தினை பிடித்தது ஐடி துறையில் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ் தான். இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 5.26 டிரில்லியன் ரூபாயாகவும் அதிகரித்தது.
ஐடி நிறுவனங்களை பொறுத்த வரையில், இந்த தொற்று நோய் காலத்திலும், அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்த கொரோனா டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவித்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் பல புதிய ஒப்பந்தங்களையும் போட்டுள்ளன. இதனால் இந்த நிறுவனங்களின் லாபமும் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளன.