மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ரீடைல் எரிபொருள் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு வாரத்தில் சர்வதேச விலைக்கு நிகராகத் தனது விலையை உயர்த்திச் சமன் செய்துள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் 100 ரூபாயைக் கடந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் சமையல் சிலிண்டர் விலையை உயர்த்த அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையைத் தினமும் உயர்த்தி வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், சமையல் சிலிண்டர் விலையை அரசின் ஒப்புதலுக்குப் பின்பு தான் உயர்த்துகிறது. இதன் அடிப்படையில் சர்வதேச விலைக்கு நிகராக எரிவாயு விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எரிவாயு நிறுவனங்கள்.

சமையல் சிலிண்டர் விலை
மத்திய அரசு இந்த விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்தால் சமையல் சிலிண்டர் விலை 5வது முறையாக உயர்த்தப்பட உள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜூலை மாதம் முதல் வீட்டில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சிலிண்டர் விலை கிட்டதட்ட 90 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மானியம்
பெட்ரோல், டீசல் மீது அளிக்கப்பட்ட மானியத்தை மோடி அரசு நீக்கியதை போலவே சமையல் சிலிண்டருக்கும் நீக்கப்பட்டு உள்ளது. ஆனால் விலையை அதிகளவிலான இடைவெளியில் தான் உயர்த்தப்படுகிறது. இதனால் எரிவாயு நிறுவனங்கள் ஏற்படும் நஷ்டத்திற்கு எவ்விதமான மானியமும் அளிக்கப்படுவது இல்லை, இதனால் விலை உயர்த்தப்பட்டும் வேளையில் பெரிய அளவில் உயர்கிறது.

சவுதி எல்பிஜி விலை
சவுதி எல்பிஜி விலை இந்த மாதம் மட்டும் சுமார் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு டன் எல்பிஜி வாயு விலை 800 டாலராக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் புதிய மானிய திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை, அதே வேளையில் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

தீபாவளிப் பண்டிகை
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் மோடி அரசு அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது தான் தற்போது முக்கியமான கேள்வி. மக்களுக்குச் சாதகமாக முடிவை எடுக்குமா..? இல்லையெனில் வருமானம் தான் முக்கியம் எனச் சர்வதேச விலைக்கு நிகராக உயர்த்துமா..?

இன்றைய விலை நிலவரம்
டெல்லி - 899.5 ரூபாய், கொல்கத்தா - 926 ரூபாய், மும்பை - 899.5 ரூபாய், சென்னை - 915.5 ரூபாய், குர்கான் - 908.5 ரூபாய், நொய்டா - 897.5 ரூபாய், பெங்களூர் - 902.5 ரூபாய், புவனேஸ்வர் - 926 ரூபாய், சண்டிகர் - 909 ரூபாய், ஹைதராபாத் - 952 ரூபாய், ஜெய்ப்பூர் - 903.5 ரூபாய், லக்னோ - 937.5 ரூபாய், பாட்னா - 998 ரூபாய், திருவனந்தபுரம் - 909 ரூபாய்.