கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே இந்திய பொருளதாரம் வளர்ச்சி காண முடியாமல் நொண்டி அடிக்கத் தொடங்கியது. அப்போது அரசு தரப்பு பல முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போக முனைந்தது.
ஏற்கனவே இந்திய பொருளாதாரத்தில் நிலவி வந்த மந்த நிலையோடு, 2020-ல், இந்த கொரோனா வைரஸ் வேறு சேர்ந்து கொண்டு பொருளாதாரத்தை அதள பாதாளத்துக்கு தள்ளத் தொடங்கிவிட்டது.
முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தை அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்த 3 முக்கிய ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்.

மன்மோகன் சிங்
இந்தியாவில் பொருளாதார மந்த நிலை என்பது ஒரு மனித நேய நெருக்கடி (humanitarian crisis). இந்த நெருக்கடியில் அரசு எடுத்த நடவடிக்கைகள், மக்களுக்கு மேலும் வலியைக் கொடுத்து இருக்கின்றன. லாக் டவுன் என்பது ஒரு தவிர்க்க முடியாத விஷயம் தான். ஆனால் லாக் டவுனை அறிவித்த விதம், கடுமையான கட்டுப்பாடுகள் எல்லாம் சிந்திக்காமலும், நிலைமையை உணர்ந்து கொள்ளாமலும் எடுத்து இருக்கிறார்கள் எனச் சொல்லி இருக்கிறார்.

பாதுகாப்பது சரியல்ல (Protectionist)
இந்தியா சில நாடுகளைப் போல, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் Protectionist-ஆக மாறிக் கொண்டு இருக்கிறது. அதிகம் இறக்குமதி வரிகளை எல்லாம் விதித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவின் எல்லா தரப்பு மக்களும் பயன் அடையச் செய்தது. தற்போது ஒரு நீண்ட கால பொருளாதார மந்த நிலை (deep and prolonged economic slowdown) தவிர்க்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங். சரி பொருளாதாரத்தை மீட்க என்ன செய்யலாம்?

அந்த 3 அட்வைஸ்
இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, 1. நேரடி பண உதவி (Direct cash assistance), 2. அரசின் க்ரெடிட் கேரண்டி கடன் உதவி (government-backed credit guarantee programmes), 3. நிதித் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது போன்ற செயல்முறைகள் வழியாக, நிதித் துறையை சரி செய்வது (Fix the Financial Sector) போன்றவைகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.

நேரடி பண உதவி (Direct cash assistance)
இப்போது இருக்கும் சூழலில், அதிகம் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது. கடன் வாங்குவது இந்தியாவின் கடன் ஜிடிபி விகிதத்தை அதிகரித்துவிடும் என்பதை ஆமோதிக்கிறேன். ஆனால், வாங்கும் கடன், மக்களின் வாழ்வை பாதுகாக்கவும், அடிப்படை வாழ்வாதாரத்தை மீட்டுக் கொண்டு வரவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பயன்படும் என்றால், கடன் வாங்குவதில் தவறில்லை எனச் சொல்லி இருக்கிறார் மன்மோகன் சிங்.

சரியாக செலவழிக்க வேண்டும்
மேலும் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாம் கடன் வாங்க தயங்கக் கூடாது. வாங்கும் கடனை சரியாக, திட்டமிட்டு செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் வியாபாரங்களுக்கு, அரசின் க்ரெடிட் கேரண்டி திட்டங்களின் கீழ் (Government-backed credit guarantee programmes) போதுமான கடன் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார்.

ஜிடிபி கணக்கு
அதோடு கடந்த 2019 - 20 நிதி ஆண்டிலேயே இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி காண முடியாமல் போராடிக் கொண்டு இருந்தது எனவும் சொல்லி இருக்கிறார். 2019 - 20 நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி 4.2 % தான் வளர்ந்து இருக்கிறது. இது கிட்டத்தட்ட கடந்த தசாப்தத்தில் இல்லாத குறைவான வளர்ச்சி எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.