இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி கார் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், விலை உயர்வால் ஏற்படும் நஷ்டத்தைத் தொடர்ந்து ஏற்க முடியாத காரணத்தால் தனது நிறுவன கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன் படி மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விலை சுமார் 34,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்த விலை உயர்வு உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்துள்ளது, புதிதாகக் கார் வாங்கத் திட்டமிட்டு உள்ளவர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பை மாருதி சசூகி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாருதி சுசூகி எந்தெந்த காருக்கு எவ்வளவு தொகையை உயர்த்தியுள்ளது என்பதை முழுமையாக அறிவிக்காத காரணத்தால் கார் வாங்குவோர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. சமீபத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இதே உற்பத்தி செலவுகளைக் காரணம் காட்டி தனது பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரையில் உயர்த்தியது.
இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களின் விலை 4,500 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் ஸ்கோடா ஜனவரி 1ஆம் தேதி முதலே தனது தயாரிப்புகளின் விலையை 2.5 சதவீதமும், வோக்ஸ் வேகன் தனது போலோ, வென்டோ கார்களின் விலையை 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் இதர ஆட்டோமொபைல் நிறுவனங்களான நிஸ்ஸான், ரெனால்ட் இந்தியா, ஹோண்டா, போர்டு, ஈசுசூ, பிஎம்டபள்யூ, ஆடி, ஹீரோ மோட்டோ காரப் ஆகிய நிறுவனங்களும் விலையை உயர்த்த திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.