டெல்லி: கொரோனாவின் தாக்கம் ருத்ர தாண்டவம் எடுத்து ஆடி வரும் நிலையில் இந்திய உற்பத்தி துறை பெருத்த அடி வாங்கி வருகிறது எனலாம்.
அதிலும் ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டே பொருளார மந்த நிலை காரணமாக அதள பாதாளம் நோக்கி சென்று, பின்பு வருட இறுதியில் தான் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியது.
ஆனால் தற்போது அதைவிட மோசமாக்கும் விதமாக கொரோனா வந்துள்ளது. அது எந்தளவுக்கு எனில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்யப்படவில்லை என்னும் அளவுக்கு.

மாருதி கொரோனாவால் பாதிப்பு
இப்படி உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதற்கு ஆட்டோமொபைல் துறை மட்டும் விதிவிலக்கா என்ன? அது நாட்டின் முன்னணி கார் விற்பனையாளரான மாருதி சுசூகியையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஒரு புறம் ஒரு வாகனங்களை கூட விற்கவில்லை. மறுபுறம் உற்பத்தியும் செய்யப்படவில்லை.

பணி நீக்கம், சம்பள குறைப்பு இல்லை
ஆனாலும் இந்த மாதிரியான நெருக்கடியான நேரத்திலும் கூட, ஊழியர்களுக்கு சம்பளத்தினை முறையாக கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அதோடு இதுவரை பணி நீக்கம் என்பதும் இந்த நிறுவனத்தில் இல்லை என கூறியுள்ளது. அது மட்டும் அல்ல நிதி ரீதியாக மிகவும் பின்னடைவை சந்தித்துள்ள சப்ளையர்ஸ் மற்றும் டீலர்களுக்கும் உதவ தயாராக உள்ளதாகவும் மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா தெரிவித்துள்ளார்.

நிகர லாபம் வீழ்ச்சி
மேலும் இதுவரையில் நாங்கள் எந்தவொரு டீலர்களிடம் இருந்தும் எந்தக் கோரிக்கையையும் பெறவில்லை. எனினும் நாங்கள் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் 2020ம் நிதியாண்டில் நிகரலாபம் 25 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது இந்த நிறுவனம், குறிப்பாக மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில் 28 சதவீதம் வீழ்ச்சி கண்டு நிகரலாபம் 1,322 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

வருவாயும் வீழ்ச்சி
மாருதி சுசூகியின் வருவாய் 15.2% குறைந்து, 18,207.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் லாபம் 1,830.8 கோடி ரூபாயாகவும் வருவாய் 21,473.1 கோடி ரூபாயாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் அதன் மானேசர் ஆலையை தொடங்க உள்ளதாகவும் மாருதி அறிவித்துள்ளது.

உற்பத்தி நிறுத்தம்
எனினும் குஜராத்தில் உள்ள ஆலையில் மீண்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாருதி தெரிவித்துள்ளது. ஏனெனில் அந்த ஆலை அமைந்திருக்கும் பகுதியில் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி மீண்டும் நிறுதப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதோடு மூன்றில் ஒரு பகுதி விற்பனையாளர்கள் 60% கிராமப்புறங்களில் செயல்படுவதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.

விற்பனை தொடக்கம்
இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 2,300 கார்களை வழங்க முடிந்தது என்றும், 5000 கார்களுக்கான முன்பதிவுகளை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இத்துறையினருக்கு விலையினைக் குறைப்பதற்கும், வாகனங்களுக்கான விலையினை குறைப்பதற்கும், தேவையை தூண்டுவதற்கும் ஜிஎஸ்டி குறைப்பு தேவை என்று இத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எப்போது இயல்பு நிலைக்கு திரும்புவோம்
மேலும் நாங்கள் எப்போது எப்போது இயல்பு நிலைக்கு திரும்புவோம். வாகனத் துறை எப்போது மீண்டு வரும் என்று யூகிப்பதில் பயன் இல்லை. ஆக இதனை கருத்தில் கொண்டு அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் நிலைமை மீண்டு வரும் நிலை வரை கார் விற்பனையும் பெரிதாக நடக்காது.

எங்களின் எதிர்பார்ப்பு?
ஆக நிச்சயம் ஜிஎஸ்டி குறைப்பு என்பது அவசியம் தேவை. இப்போதே வாகனங்கள் உற்பத்தி இல்லை. ஒரு வேலை விற்பனை அதிகரித்தாலும் கூட, விற்பனை செய்ய வாகனங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் இத்துறையிலான அழுத்தம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீட்டிக்குமோ என்பது தெரியவில்லை என்று கூறகின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.